/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டுதோறும், மே 16ல் பாசனத்துக்கு நீர் வழங்குவதை உறுதிப்படுத்துங்க! பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
/
ஆண்டுதோறும், மே 16ல் பாசனத்துக்கு நீர் வழங்குவதை உறுதிப்படுத்துங்க! பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
ஆண்டுதோறும், மே 16ல் பாசனத்துக்கு நீர் வழங்குவதை உறுதிப்படுத்துங்க! பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
ஆண்டுதோறும், மே 16ல் பாசனத்துக்கு நீர் வழங்குவதை உறுதிப்படுத்துங்க! பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2024 05:39 AM
பொள்ளாச்சி ; 'ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு முறையாக மே 16ம் தேதி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலைப்பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மழைப்பொழிவு போதுமான அளவு கிடைத்ததால், அணைக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும், நடப்பாண்டு மே மாதம் திறக்க வேண்டிய தண்ணீர், தாமதமாக திறக்கப்பட்டதால் மழையில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும்; முறையாக குறிப்பிட்ட மாதங்களில் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் வித்யாசாகர், அரியாபுரம் பாசன சபை தலைவர் வஞ்சிமுத்து, பள்ளி வளங்கால் பாசன சபை தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், பரம்பிக்குளம் கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமாரிடம் வழங்கினர்.
பயிர்கள் சேதம்
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், ஆழியாறு படுகை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அரசாணை எண், 1150 (1983ம் ஆண்டு ஆக., 4ம் தேதி) படி, மே 16 முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்., 15 வரை, 11 மாதங்கள் இடைவிடாது இருபோக நெல், வாழை, கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இந்தாண்டு கடந்த மே 16ம் தேதி தண்ணீர் வழங்குவதற்கு பதிலாக முதல் போகத்துக்கு ஜூன் முதல் வாரம் அரசாணை பெற்றும், அணைக்கட்டு பகுதியில் புனரமைப்பு பணிகள் நிறைவடையாததால், ஜூலை முதல் வாரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டது.
இந்தாண்டு, 45 நாட்கள் தாமதமாக தண்ணீர் வழங்கியதால், வடகிழக்கு பருவமழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே வரும் காலங்களில் அரசாணைப்படி மே 16ல் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசனநீர், பி.ஏ.பி., அணையில் இருந்து தான் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அவ்வாறு வழங்காமல், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு அணையின் நீரினை வழங்குவதாலும்,
இருமாநில ஒப்பந்த அடிப்படையில் கேரளாவுக்கு நீரினை வழங்காமல் ஜன., முதல் ஏப்., வரையிலான காலகட்டத்தில் அதிகப்படியான நீரினை கேரளாவுக்கு வழங்குவதாலும், ஏப்., மாத இறுதியிலேயே ஆழியாறு அணை நீர் வெகுவாக குறைந்து விடுகிறது.
அதனால், எங்களுக்கு மே 16ல் வழங்க வேண்டிய முதல்போக பாசனம் தடைபடுகிறது. அதனால், இந்தாண்டு புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து தான் நீரினை பெற்று வழங்க வேண்டும்.
மேலும், இருமாநில ஒப்பந்தப்படி கேரளாவுக்கு உரிய நீரினை மட்டுமே வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.