/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியையிடம் உதவுவதாக ரூ.13 லட்சம் 'கறந்த' நபர் கைது
/
பேராசிரியையிடம் உதவுவதாக ரூ.13 லட்சம் 'கறந்த' நபர் கைது
பேராசிரியையிடம் உதவுவதாக ரூ.13 லட்சம் 'கறந்த' நபர் கைது
பேராசிரியையிடம் உதவுவதாக ரூ.13 லட்சம் 'கறந்த' நபர் கைது
ADDED : ஜன 18, 2025 12:35 AM
கோவை:கோவை, ஈச்சனாரியைச் சேர்ந்தவர், 33 வயது பெண்; காரமடை பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி பேராசிரியை. இவர், 2023 முதல், பல்வேறு 'லோன் ஆப்'களில் 12 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். கடனை உரிய நேரத்தில், திருப்பி செலுத்தியும் வந்துள்ளார்.
ஒரு லோன் ஆப்பை சேர்ந்த சில நபர்கள், பேராசிரியையிடம் இருந்து அதிக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது புகைப்படங்களை, 'மார்பிங்' செய்து பேராசிரியையின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இதனால், அவர் மன உளைச்சலில் இருந்தார்.
இதனிடையே, உடுமலையைச் சேர்ந்த அரவிந்த், 31, என்பவர் பேராசிரியை பணியாற்றும் கல்லுாரிக்கு சைபர் கிரைம் குறித்து, விழிப்புணர்வு வகுப்பு எடுக்க வந்தார். அவரிடம், நடந்த சம்பவத்தை கூறி உதவுமாறு கேட்டுள்ளார்.
அவர் உதவுவதாக உறுதியளித்தார்.
பேராசிரியையின் படங்களை நீக்கவும், லோன் செயலி நபர்களிடம் இருந்து காப்பாற்றவும் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி சிறிது, சிறிதாக 13 லட்சம் ரூபாய் வரை கறந்து தள்ளினார்.
பணம் கொடுத்த பிறகும், லோன் ஆப் நபர்கள் தொடர்பு கொண்டு மிரட்டியதால், பேராசிரியை அரவிந்திடம் கேட்டுள்ளார்.
அப்போது அவர், 'சின்னதா ஒரு தப்பு நடந்து போச்சு. தவறுதலா பணத்தை வேற ஒரு ஆள்கிட்ட குடுத்து ஏமாந்துட்டேன்... சாரி மேடம்' என, பூசி மெழுகியுள்ளார்.
பேராசிரியை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடுமலையை சேர்ந்த அரவிந்தை கைது செய்தனர்.