/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல பூஜை திருவிழா; பாலக்கொம்பு ஊர்வலம்
/
மண்டல பூஜை திருவிழா; பாலக்கொம்பு ஊர்வலம்
ADDED : டிச 15, 2024 11:07 PM

வால்பாறை; வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழாவையொட்டி, ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், 65ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் கடந்த 12ம் தேதி மாலை நடந்த திருவிளக்கு பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேற்றுமுன்தினம் காலை, 5:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:15 மணிக்கு உஷபூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு அன்னதானம் வழங்கபட்டது.
மாலை, 4:30 மணிக்கு ஸ்டேன்மோர் ரோடு மாரியம்மன் கோவிலில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்தும், பெண்கள் கையில் விளக்கு ஏந்தியும், நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச்சென்று, இரவு, 9:00 மணிக்கு கோவிலை சென்றடைந்தனர்.
விழாவில் நேற்று மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டிகள் செய்திருந்தனர்.