ADDED : செப் 09, 2025 10:43 PM
கோவை; கோவை உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், தமிழ் அறிஞர் மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள, பொறியாளர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அரங்க வள்ளியப்பன் தலைமை வகித்தார்.
'இன்றைய சூழலில் மறைமலையடிகள்' என்ற தலைப்பில், கவிஞர் கோவை தமிழ்பித்தன் பேசுகையில், ''தனித்தமிழை உயிராகவும், உணர்வாகவும் போற்றி வாழ்ந்தவர் மறைமலை அடிகள். அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டால், தமிழ் மொழி வளர்ச்சி அடைந்தது. சென்னை பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி, தமிழ் மொழி மறுமலர்ச்சி அடைய காரணமாக இருந்தார்,'' என்றார்.
மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவி பிரதன்யா, 150 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தார்.
கணுவாய் சாரதாம்பாள் நாட்டிய பள்ளி மாணவியர், பாரதிதாசன் பாடலுக்கு நாட்டியமாடினர்.
உலகத் தமிழ் நெறிக்கழக செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் ரமேஷ், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.