/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் தேரோட்டம் இன்று துவக்கம் பொள்ளாச்சி நகரமே விழாக்கோலம்
/
மாரியம்மன் தேரோட்டம் இன்று துவக்கம் பொள்ளாச்சி நகரமே விழாக்கோலம்
மாரியம்மன் தேரோட்டம் இன்று துவக்கம் பொள்ளாச்சி நகரமே விழாக்கோலம்
மாரியம்மன் தேரோட்டம் இன்று துவக்கம் பொள்ளாச்சி நகரமே விழாக்கோலம்
ADDED : மார் 06, 2024 12:12 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று தேரோட்டம் துவங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள், புனித நீரை கொண்டு வந்தும், பூவோடு எடுத்தும் அம்மனை தரிசித்தனர்.
பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி கம்பம் நடுதல், 27ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை விரதமிருந்த பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர்.
இன்று காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு தேர் முதல் நாள், வெள்ளி தேரோட்டம் துவங்குகிறது.
கோவில் வளாகத்தில் இருந்து, அம்மன் எழுந்தருளும் வெள்ளி தேரும், விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும் வடம் பிடிக்கப்படுகிறது. வெங்கட்ரமணன் வீதியில் இரு தேரும் நிறுத்தப்பட்டு, நாளை (7ம் தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்குகிறது.
அதன்பின், சத்திரம் வீதியிலும் தேர் நிறுத்தப்பட்டு, 8ம் தேதி (மூன்றாம் நாள்) தேரோட்டம் துவங்கி, கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது.
வரும், 9ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 11ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
கண்காணிப்பு தீவிரம்
திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள், ஊர்வலமாக புனித நீரை எடுத்துக்கொண்டு, மேள, தாள இசையுடன் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால், பொள்ளாச்சி பகுதியே நேற்றுமுதல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கட்டுப்பாட்டு அறை வாயிலாக, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். போலீசார், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
தேரோட்டம் துவங்குவதையடுத்து முதல் நாளான இன்று, கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள், பெட்ரோல் பங்க் அருகே செல்லும் ஊத்துக்காடு ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, உடுமலை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பி விடப்படுகின்றன.
அதுபோன்று, கூட் ெஷட் ரோடு, திருவள்ளுவர் திடல் வழியாகவும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
நாளை, உடுமலை ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள், பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8ம் தேதி, சத்திரம் வீதி வழியாக வரும் வாகனங்கள், பார்க் ரோடு வழியாக மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேர் நிறுத்தப்பகுதியில், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

