/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் தேரோட்டம் நாளை துவக்கம்: வெள்ளித்தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
/
மாரியம்மன் தேரோட்டம் நாளை துவக்கம்: வெள்ளித்தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
மாரியம்மன் தேரோட்டம் நாளை துவக்கம்: வெள்ளித்தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
மாரியம்மன் தேரோட்டம் நாளை துவக்கம்: வெள்ளித்தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்
ADDED : மார் 05, 2024 12:10 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், தேர்த் திருவிழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. விழாவுக்காக வெள்ளித்தேர் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம், 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 19ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, கடந்த, 27ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி துவங்கியது.
கடந்த, 1ம் தேதி முதல் இன்று (5ம் தேதி) வரை விரதமிருக்கும் பக்தர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளித்தேரோட்டம் நிகழ்ச்சி நாளை (6ம் தேதி) துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, நாளை காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவில் வளாகத்தில் இருந்து தேரோட்டம் துவங்கி, வெங்கட்ரமணன் வீதியில் நிலை நிறுத்தப்படும். இரண்டாம் நாள், சத்திரம் வீதியில் நிலை நிறுத்தப்படும் தேர், வரும், 7ம் தேதி (மூன்றாம் நாள்) கோவிலில் தேர் நிலை நிறுத்தப்படுகிறது.
தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தயாரான தேர்
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேரும், விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும் தயார்படுத்தும் பணி வேகமாக நடக்கிறது. வெள்ளித்தேர் மற்றும் தேரில் உள்ள சிலைகள் சுத்தம் செய்யப்பட்டன.
தேர் சக்கரங்களுக்கு கிரீஸ் போட்டு தேர் சக்கரம் தயார்படுத்தப்பட்டது. இரவு நேரத்தில் தேர் முழுவதும் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. மரத்தேரில், விநாயகர் எழுந்தருளும் இடம், மேல் பாகம் ஆகியவை முழுவதும் சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் மாற்றும் பணி நடக்கிறது.

