/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதிர்ந்த கம்பு கதிர் அறுவடை செய்ய முடியல
/
முதிர்ந்த கம்பு கதிர் அறுவடை செய்ய முடியல
ADDED : மே 18, 2025 10:09 PM

மேட்டுப்பாளையம் ; சிறுமுகை அருகே முதிர்ந்த நிலையில் உள்ள, கம்பு கதிர் அறுவடை செய்ய, ஆள் கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுமுகை அருகே கணேசபுரம் பகுதியில் விவசாயிகள், கம்பு, மானா வாரியாக பயிர் செய்துள்ளனர். தற்போது அதன் கதிர்கள் நன்கு முற்றிய நிலையில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால் வேலை ஆட்கள் கிடைக்காததால், நன்கு முதிர்ந்த கதிர்களை, பறவைகள் சேதம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கம்பு ஒரு ஏக்கரில், 10 கிலோ வீதம் மானா வாரியாக வயலில் விதைத்து உழவு செய்தோம். கம்பு விதைத்த போது ஏராளமான குருவிகளும், காக்கைகளும் அதை சாப்பிட்டன. விதைத்த கம்பில், 25 சதவீதம் பறவைகள் சாப்பிட்டன. மீதமுள்ள, 75 சதவீதம் கம்பு பயிராக வளர்ந்தது. வளர்ந்த பயிர்களை, மான், யானைகள், பயிர்களை சாப்பிட்டு சேதம் செய்து வந்தன. இரவில் ஆட்களை வைத்து யானைகளுக்கு காவல் காத்து, பயிர்களை பாதுகாத்தோம். தற்போது கம்பு கதிர்கள் நன்கு முற்றிய நிலையில், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
ஆனால் கதிர்களை அறுவடை செய்ய ஆட்களை அழைத்த போது தோட்டத்து வேலை செய்வதற்கு ஆட்கள் யாரும் வர மறுத்தனர். இதற்கு இடையில் பகலில் பறவைகளும், இரவில் காட்டுப் பன்றிகளும் நிலங்களில் புகுந்து, கம்புகளை சாப்பிட்டு வருகின்றன.
நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போதும், அதை அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால், பயிர் செய்தும் விவசாயிகளுக்கு, பயனில்லாமல் போகிற நிலை ஏற்பட்டுள்ளது. வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, அறுவடை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யும் பொழுது விவசாயிக்கு எவ்வித லாபமும் கிடைக்காது. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்களை, விவசாய கூலி வேலைக்கும் அமர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.