/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்களை பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இயக்க எதிர்பார்ப்பு
/
மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்களை பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இயக்க எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்களை பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இயக்க எதிர்பார்ப்பு
மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்களை பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இயக்க எதிர்பார்ப்பு
UPDATED : அக் 17, 2024 05:08 PM
ADDED : அக் 03, 2024 07:57 PM
'மயிலாடுதுறை மற்றும் திருச்செந்துாரில் இருந்து பழநி மற்றும் பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு இயக்கப்படும், முன்பதிவில்லாத ரயில் சேவையை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு மாற்றித்தர வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, கோவை மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், மிகவும் முக்கியமானது கோவை. தொழில் நிமித்தமாகவும், மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
அதனால், அனைத்து பகுதி மக்களும் பயன்படுத்தும் வகையில், போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு, முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க, ரயில் பயணிகள் சங்கங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.
அக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, தெற்கு ரயில்வேயின் முன்மொழிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள உத்தேச ரயில் சேவை, மயிலாடுதுறையில் புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக கோவை வருவதற்கு பதிலாக, பாலக்காடு வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது, கோவை மாவட்ட பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ரயில் பயனாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்விரு ரயில்களையும் கோவைக்கு மாற்றி இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்க்கு, கோவை மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
மயிலாடுதுறை மற்றும் திருச்செந்துாரில் இருந்து முன்பதிவில்லா ரயில் சேவை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, கோவை மற்றும் நீலகிரி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்புகளை மீறி, ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள தவறான முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. தமிழக ரயில் பயணிகளின் தேவையறிந்து, மயிலாடுதுறையில் இருந்து பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை சந்திப்புக்கு வரும் வகையில், முன்பதிவில்லா ரயில் (எண்: 06415/06416), பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கு இயக்கப்படும் ரயில் (எண்: 16731/ 16732) சேவையை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு மாற்றவேண்டும்.
இதேபோல், உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி கடந்து, பாலக்காடு வரை நீட்டிக்கும் நடவடிக்கையையும், கடுமையாக எதிர்க்கிறோம். இச்சேவையை பழநி வரை நீட்டித்தால், பயனுள்ளதாக இருக்கும். தெற்கு ரயில்வே நிர்வாகம் சாதகமான நடவடிக்கை எடுக்கும் எனநம்புகிறோம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -