/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி
ADDED : செப் 18, 2025 10:00 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டத்தில், 51,800 கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் எனப்படும் அம்மை நோய் தாக்குதல், தற்போதைய பருவ காலங்களில் ஏற்படும். இந்நோய் பாதித்தால் உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தண்ணீர் மற்றும் தீவனம் உட்கொள்ளாது. படிப்படியாக பால் உற்பத்தி குறைந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
நோய் வரும் முன் காக்கும் வகையில், எல்.எஸ்.டி., (லம்பி ஸ்கின் டிசீஸ்)எனப்படும் தடுப்பூசியை செலுத்தினால், அம்மை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என, கால்நடைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொள்ளாச்சி கோட்டத்தில், 39 கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பசுக்கள், எருமை போன்றவற்றிற்கு எல்.எஸ்.டி., எனும் அம்மை நோய் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. குறிப்பாக, 51,800 டோஸ் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 3ம் முதல் அந்தந்த பகுதி கால்நடை டாக்டர் வாயிலாக தடுப்பூசி போடப்படுகிறது.
வரும் 31ம் தேதி வரை, தடுப்பூசி முகாம் கிராமங்களில் நடைபெற உள்ளதால், கால்நடை வளர்ப்போர், தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும், என, கால்நடைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.