/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்த மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு! 4 மாதங்களாக நோயாளிகள் அவதி
/
சித்த மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு! 4 மாதங்களாக நோயாளிகள் அவதி
சித்த மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு! 4 மாதங்களாக நோயாளிகள் அவதி
சித்த மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு! 4 மாதங்களாக நோயாளிகள் அவதி
ADDED : மே 21, 2025 11:16 PM
பொள்ளாச்சி, ;சித்த மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக, நான்கு மாதங்களாக நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, நல்லட்டிபாளையம், பெரியபோது, உடுமலை, மடத்துக்குளம், ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி போன்ற இடங்களில் அரசு சித்த மருத்துவப்பிரிவு இயங்கி வருகிறது.
இப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், நாள்பட்ட நோய்கள், சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற சித்த மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.
மேலும், சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவைக்கும் சிகிச்சை பெற மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா காலத்தில் நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்றவை சித்தா பிரிவு சார்பில் வழங்கப்பட்டன.
இந்த பிரிவுக்கு தற்போது மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், மருந்து பற்றாக்குறையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இயற்கையான முறையில் வைத்தியம் பெற, சித்த வைத்தியத்தை பலரும் நாடுகின்றனர். இது நல்ல பலனை கொடுப்பதால், தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த, நான்கு மாதங்களாக மருந்துகள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளை நாடி செல்லும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எந்த மருந்துகள் கேட்டாலும், இல்லை என்ற பதிலே வருகிறது.
கால் வலிக்கான தைலங்கள், பெயின் பாம், களிம்பு, அமுக்கரா சூரணம், திரிபலா சூரணம், தாளிசாதி சூரணம் போன்ற சூரண மருந்துகளும், டானிக்குகளும் முறையாக தமிழக அரசின் மருந்து வழங்கும் நிறுவனம், 'டாம்ப்கால்' வாயிலாக சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. இது குறித்து காரணம் கேட்டால், 'டாம்ப்கால்' நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல கோடி மருந்து பொருட்கள் தீக்கிரையானதாகவும், விரைவில் சீர் செய்து சப்ளை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
கோவை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''மூலப்பொருட்கள் பற்றாக்குறை, 'டாம்ப்கால்' நிறுவனத்தில் தீ விபத்து போன்ற காரணங்களால், மருந்து சப்ளை தாமதமாகிறது. தற்போது, மருந்து சப்ளை துவங்கப்பட்டுள்ளது. இனி தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.