ADDED : ஆக 26, 2026 06:23 PM
கோவை, ஆக. 27–
நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா,நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோட்டைமேடு பள்ளிவாசலில், சமூக ஒற்றுமை, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், குழந்தைகளின் ஊர்வலம் நடந்தது. பொதுமக்களுக்கு 2 ஆயிரம் கிலோ பிரியாணி வழங்கப்பட்டது.
கேரள முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள இர்ஷாதுல் முஸ்லிமின் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், துணை செயலாளர் பைசல் தலைமையில், நபிகள் நாயகம் புகழ் பாடி, குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர்.
ஜி.எம்.நகரில், 11 வது ஆண்டு சுன்னத் ஜமாஅத் யூத் பெடரேஷன் சார்பில், இரவு நேர பிரார்த்தனையுடன், ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது. சுகுணாபுரம் நஜ்மல் ஹாபியா சுன்னத் ஜமாத் சார்பில், பள்ளி தலைவர் சிராஜூதீன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். குறிச்சி பிரிவு ஹாபியா ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பில், தலைவர் உமர் தலைமையில், மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது.
உக்கடம் மவுலானா முஹம்மது அலி மார்க்கெட் எனப்படும் பழைய மார்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், 83வது ஆண்டு மீலாது விழா, மார்க்கெட் தலைவர் நூர் முஹம்மத் தலைமையில் நடந்தது. ரூ. 12.50 லட்சம் உதவிகள் வழங்கப்பட்டன. 50 தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் கருவி மற்றும் இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன. ஏழை குடும்பங்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.
