/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமலுக்கு வராத குறைந்தபட்ச சம்பள உத்தரவாதம்! அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்
/
அமலுக்கு வராத குறைந்தபட்ச சம்பள உத்தரவாதம்! அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்
அமலுக்கு வராத குறைந்தபட்ச சம்பள உத்தரவாதம்! அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்
அமலுக்கு வராத குறைந்தபட்ச சம்பள உத்தரவாதம்! அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்
ADDED : செப் 18, 2025 10:04 PM
நகர்ப்புற உள்ளாட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வழங்குவதில் இழுபறி நீடிப்பதால், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி யில் துாய்மைப்பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. துாய்மைப் பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
அதன்படி, சராசரியாக தினசரி, 600 ரூபாய்க்கும் மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டிய நிலையில், இடத்திற்கு ஏற்றாற் போல், 100 முதல், 180 ரூபாய் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது.
'குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்து, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்ப்பும் பெறப்பட்டது.
இருப்பினும், உள்ளாட்சி நிர்வாகங்கள், குறைந்தபட்ச சம்பளம் வழங் காமல் இழுத்தடித்து வருகின்றன.
இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சம்மேளன (சி.ஐ.டி.யு.,) மாநில பொருளாளர் ரங்கராஜ் கூறுகையில், ''துாய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணைப்படி, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு, அறிவித்தபடி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். சட்டப்படி, தொழிலாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 25ல், மாநிலம் முழுதும், நகராட்சி, மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
- நமது நிருபர் -