முக்கிய நகரங்களில் மாதிரி மையங்கள் பத்திரப்பதிவு துறைக்கு வேண்டுகோள்
முக்கிய நகரங்களில் மாதிரி மையங்கள் பத்திரப்பதிவு துறைக்கு வேண்டுகோள்
UPDATED : நவ 29, 2026 09:14 PM
ADDED : நவ 29, 2026 09:14 PM
கோவை: இடைத்தரகர் இல்லாமலோ, லஞ்சம் கொடுக்காமலோ பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துக்களை பதிவு செய்ய முடியாத சூழல் இருந்தது. மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஸ்டார் 3.0 திட்டத்தில் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். 25 இடங்களில் மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதை வரவேற்று பாராட்டியுள்ள ‘கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்’ செயலர் கதிர்மதியோன், பத்திரப்பதிவு துறை செயலர் மற்றும் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘ஸ்டார் 3.0 திட்டம், முன்மாதிரி பதிவு மையங்கள் ஊழலற்ற சேவையை மக்களுக்கு தரும். இடைத்தரகர்களை சார்ந்து இருக்காமலோ, கூடுதல் கட்டணம் செலுத்தாமலோ தங்களது ஆவணங்களை பதிவு செய்யலாம்’ என கூறியுள்ளார்.
மேலும் ‘நியாயமான சேவை கட்டணமே வசூலிக்க வேண்டும். ஆன்லைன் வசதி அதிக செலவு ஏற்படும் சலுகையாக மாறி விடக்கூடாது. முதல்கட்டமாக, வடகோவை உள்ளிட்ட 5 நகரங்களில் முன்மாதிரி மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. முக்கிய நகரங்கள், அதிக பத்திரப்பதிவு நடக்கும் தாலுகாக்களை தேர்வு செய்து மீதமுள்ள 20 மையங்களை விரிவுபடுத்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
