/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம்., மெஷினில் ஸ்டிக்கர் ஒட்டி நுாதன திருட்டு; இருவருக்கு வலை
/
ஏ.டி.எம்., மெஷினில் ஸ்டிக்கர் ஒட்டி நுாதன திருட்டு; இருவருக்கு வலை
ஏ.டி.எம்., மெஷினில் ஸ்டிக்கர் ஒட்டி நுாதன திருட்டு; இருவருக்கு வலை
ஏ.டி.எம்., மெஷினில் ஸ்டிக்கர் ஒட்டி நுாதன திருட்டு; இருவருக்கு வலை
ADDED : செப் 30, 2024 11:36 PM
கோவை: ஏ.டி.எம்., மெஷினில் ஸ்டிக்கர் ஒட்டி, நுாதன திருட்டில் ஈடுபட்ட இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்துார், ரத்தினபுரி, ஆவாரம்பாளையம், சுந்தராபுரம் உட்பட இடங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பின் நம்பர் பதிவு செய்தவுடன் பணம் எண்ணுவது போல சத்தம் மட்டும் வந்துள்ளது. ஆனால் பணம் வரவில்லை. சிறிது நேரத்தில் அந்த பணம் வங்கி கணக்கில் திரும்பி விடும் என்று, அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
வங்கி கணக்கிற்கு பணம் வராததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதுபோன்று பல புகார்கள் வர துவங்கின. -அதிகாரிகள் பொதுமக்கள் புகார் தெரிவித்த வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஏ.டி.எம்., மெஷினில், பணம் வெளியே வரும் பகுதியில் சிறிய ஸ்டிக்கர் போன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இந்த நுாதன மோசடியை கண்டு, அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் ஏ.டி.எம்., மைய சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ரத்தினபுரி பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், ஸ்கூட்டரில் வந்த இரண்டு வாலிபர்கள் ஏ.டி.எம்., மையத்தில் சென்று ஸ்டிக்கர் ஒட்டுவதும், பின் அங்கிருந்து வெளியே வந்து காத்திருந்து, பொதுமக்கள் சென்ற பின் பணத்தை திருடி சென்றதும் தெரிந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில், அந்த இரண்டு வாலிபர்களும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் அவர்கள் கைவரிசை காட்டி போலீசில் சிக்கி, சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிந்தது.
இவர்களுக்கு நாமக்கல்லில் பிடிபட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். பணத்தை திருடி சென்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவரையும் தேடி வருகின்றனர்.