/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி. கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு! விரைவாக, தரமாக மேற்கொள்ள அறிவுரை
/
பி.ஏ.பி. கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு! விரைவாக, தரமாக மேற்கொள்ள அறிவுரை
பி.ஏ.பி. கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு! விரைவாக, தரமாக மேற்கொள்ள அறிவுரை
பி.ஏ.பி. கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு! விரைவாக, தரமாக மேற்கொள்ள அறிவுரை
ADDED : டிச 18, 2025 07:41 AM

பொள்ளாச்சி: பி.ஏ.பி. கால்வாய்களை துார்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 10 பேர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தில் பாலாறு படுகையில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும்; ஆழியாறு படுகையில் புதிய ஆயக்கட்டில், 44,000 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. பாலாறு படுகையில், நான்கு மண்டலங்களாகவும், ஆழியாறு படுகை இரண்டு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.
பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் நீர்வளத்துறை பொறுப்பில் உள்ளது. 1,000 கி.மீ., துாரம் உள்ள பகிர்மான கால்வாய்கள், உப பகிர்மான கால்வாய்கள் பாசன சங்கங்களின் பொறுப்பில் உள்ளது.
கடந்த காலங்களில் குடிமராமத்து நிதி என ஒவ்வொரு பாசன சங்கங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களும் துார்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த, நான்கு ஆண்டுகளாக குடிமராமத்து நிதி ஒதுக்காததாலும், பாசன சங்கங்களில் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினாலும், பாசன சங்கங்களின் பொறுப்பில் உள்ள கால்வாய்களை துார்வார இயலாமல் கடைமடை வரை தண்ணீர் கொண்டு சேர்க்க இயலாத நிலை உள்ளது.
ஆண்டுதோறும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பாசன கால்வாய்களை துார்வாரி கொடுக்க வேண்டும் என, கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்து துார்வாரப்படுகிறது.
இந்நிலையில், கால்வாய்களை துார்வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பி.ஏ.பி. பாசன சபை விவசாயிகள், திட்டக்குழுவினர், முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர். உடுமலையில் நடந்த நிகழ்வில் முதல்வர், கால்வாய்கள் துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
அதன்பின், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததும், கடந்த, 13ம் தேதி பணிகள் துவக்கப்பட்டது. இதில், கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
தேவம்பாடிவலசு பகிர்மான கால்வாய், அர்த்தநாரிபாளையம் கிளை கால்வாயில் நடைபெறும் சிறப்பு துார்வாரும் பணியை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். விரைவாகவும், தரமாகவும் பணிகளை மேற்கொண்டு சரியான நேரத்தில் முடிக்க அறிவுரை வழங்கினர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பி.ஏ.பி. கால்வாய்களில், 154 சிறப்பு துார்வாரும் பணிகள் 10 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படுகின்றன.கால்வாயில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு நீர் வழித்தடம் சீரமைக்கப்படுகிறது. மேலும், புதர்கள் அகற்றப்படுகின்றன.
எதிர்வரும் பாசன காலத்தில் விவசாயிகளுக்கு தடையில்லா நீர் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில், சிறப்பு துார்வாரும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகள் முறையாக நடக்கிறதா என கண்காணிக்க செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் அடங்கிய, 10 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, பணிகள் நடைபெறும் பகுதிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பணிகளின் தரம், முன்னேற்றம், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு, கூறினர்.

