/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வழிப்பாதைகளில் அத்துமீறும் வாகன ஓட்டிகள்: கண்காணிக்காமல் போலீசார் அலட்சியம்
/
ஒரு வழிப்பாதைகளில் அத்துமீறும் வாகன ஓட்டிகள்: கண்காணிக்காமல் போலீசார் அலட்சியம்
ஒரு வழிப்பாதைகளில் அத்துமீறும் வாகன ஓட்டிகள்: கண்காணிக்காமல் போலீசார் அலட்சியம்
ஒரு வழிப்பாதைகளில் அத்துமீறும் வாகன ஓட்டிகள்: கண்காணிக்காமல் போலீசார் அலட்சியம்
ADDED : நவ 28, 2025 05:28 AM

கோவை: கோவை போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு குறைந்து விட்டதால், ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் வருவது அதிகரித்து வருகிறது.
கோவை நகர் பகுதியில் வாகனப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. பிரதான சாலைகளில் மேம்பாலங்கள் கட்டியிருந்தாலும் கூட, சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. பீக் ஹவர்ஸில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சமீபகாலமாக போலீசாரின் நேரடி கண்காணிப்பு குறைந்து விட்டதால், போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து விட்டன. முன்பெல்லாம் விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இத்தகைய நடவடிக்கை தற்போது அரிதாகி விட்டது. அதற்கு பதிலாக கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கின்றனர்.
விதிமீறிச் செல்லும் வாகனங்களின் எண்ணை கண்டுபிடித்து, ஆன்-லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். அவ்வாகனத்தை விற்கும்போது மட்டுமே, போக்குவரத்து விதிமீறலுக்காக எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது என்பது கண்டறியப்படுகிறது. வாகனத்தை விற்கும் எண்ணம் இல்லாதவர்கள், அபராதம் விதிப்பது தெரியாமலேயே தங்கள் இஷ்டத்துக்கு ஒரு வழிப்பாதையில் செல்கின்றனர்.
உதாரணத்துக்கு, உப்பிலிபாளையம் பாலத்தின் சுரங்கப் பாதையில் வருவோர் இடதுபுறம் திரும்பி காட்டூர் செல்கின்றனர். இது ஒரு வழிப்பாதை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் காளீஸ்வரா மில் முன் போலீசாரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாமல், காட்டூரில் இருந்து உப்பிலிபாளையம் பாலம் நோக்கி எதிர்திசையில் செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார், சரக்கு வாகனங்களும் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் நின்று, வாகனங்களை தடுத்து நிறுத்தினால், நஞ்சப்பா ரோடு ரவுண்டானா சென்று 'யூ டேர்ன்' அடித்து, அவிநாசி ரோடு வந்தடைந்து, உப்பிலிபாளையம் ரவுண்டானாவை சுற்றி, எந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவ்வழியில் பயணிக்க வேண்டியுள்ளது. தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதால், விதிமீறல் என்று தெரிந்திருந்தும் கூட, ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
இதேபோல், உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இருந்து ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் இறங்கி வருவோர், எதிர் திசையில் வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல், சோமசுந்தரா மில்லுக்கு எதிரே உள்ள ரயில்வே சுரங்கப்பாதைக்குச் செல்ல முயல்கின்றனர். இதன் காரணமாக, எதிரே வரும் வாகனங்களுடன் உரசிக்கொள்கின்றன.
நஞ்சப்பா ரோட்டில் வருவோர் ராம்நகருக்கு செல்ல அலங்கார் ஹோட்டல் வீதியை பயன்படுத்த வேண்டும். ராம்நகரில் இருந்து நஞ்சப்பா ரோடு செல்ல ஏ1 சிப்ஸ் கடை அமைந்துள்ள அடுத்த வீதியை பயன்படுத்த வேண்டும். ஆனால், அலங்கார் ஹோட்டல் வீதி வழியாகவே வாகன ஓட்டிகள் எதிர் திசையில் பயணிக்கின்றனர். போக்குவரத்து போலீசார் நின்றிருந்தால் மட்டும் இவ்வழியை தவிர்க்கின்றனர்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் 5ம் நம்பர் வீதி மற்றும் 11ம் நம்பர் வீதி ஆகியவை ஒரு வழிப்பாதைகள். இருப்பினும் எதிர் திசையில் வாகனங்கள் வருவது சர்வசாதாரணமாகி விட்டது. ஒப்பணக்கார வீதியில் இருந்து வெரைட்டி ஹால் ரோடு வழியாக வந்து போஸ்ட் ஆபீஸ் வழியாக கூட்ஸ் ஷெட் ரோடு செல்வது ஒரு வழிப்பாதை. இவ்வழியிலும் எதிர் திசையில் வாகனங்கள் செல்கின்றன.
விதிமீறல் என்று நன்கு தெரிந்தும் வாகன ஓட்டிகள் அத்துமீறுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்காணிப்பு கேமரா பார்த்துக் கொள்ளும் என போக்குவரத்து போலீசார் அலட்சியமாக இருக்கின்றனர். இரு தரப்பிலும் தவறு இருக்கிறது. தவறு தொடராமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவை எவை ஒரு வழிப்பாதை என்பதை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தெளிவுபடுத்த வேண்டும். விபத்தால் உயிர் பலி ஏற்படும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது சிறப்பு.

