/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்ரோ'வுக்கு சேர்த்து சத்தி ரோட்டில் நிலம் கையகப்படுத்த எம்.பி., தலைமையில் ஆய்வு
/
'மெட்ரோ'வுக்கு சேர்த்து சத்தி ரோட்டில் நிலம் கையகப்படுத்த எம்.பி., தலைமையில் ஆய்வு
'மெட்ரோ'வுக்கு சேர்த்து சத்தி ரோட்டில் நிலம் கையகப்படுத்த எம்.பி., தலைமையில் ஆய்வு
'மெட்ரோ'வுக்கு சேர்த்து சத்தி ரோட்டில் நிலம் கையகப்படுத்த எம்.பி., தலைமையில் ஆய்வு
ADDED : ஜன 29, 2025 11:09 PM
கோவை; கோவை - சத்தி ரோட்டில், 'மெட்ரோ ரயில்' வழித்தடத்துக்கும் சேர்த்து நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, எம்.பி.,ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், நேற்று கள ஆய்வு செய்தனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காந்திபுரம் வழியாக, சத்தி ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை, 14.4 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' இயக்க திட்ட அறிக்கை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 14 இடங்களில் ஸ்டேஷன் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் மெட்ரோ ரயில், கணபதி நோக்கிச் செல்லும்போது, காந்திபுரம் மேம்பாலத்தின் இடதுபுறம் பயணிக்கும்; மேம்பாலம் இல்லாத பகுதிகளில் சாலையின் மையத்தில் செல்லும்.
ஒரே ஒரு துாண் மட்டுமே அமைக்கப்படும்; வளைவுப் பகுதி வரும்போது கூடுதல் துாண்கள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஸ்டேஷன்கள் அமையும் இடங்களில், கூடுதலாக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இதில், டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை, ரோடு குறுகலாக இருப்பதால், தினமும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. அச்சாலையை அகலப்படுத்த, மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
20 மீட்டர் நிலம் கையகப்படுத்த, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஏற்கனவே அளவீடு செய்திருக்கின்றனர். தற்போது 'மெட்ரோ' ரயிலுக்கும் இடம் ஒதுக்க வேண்டுமென்பதால், கூடுதலாக, 4 மீட்டர் சேர்த்து, 24 மீட்டருக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
முதல்கட்டமாக, டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை, 24 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்தி, சாலையை தயார்படுத்தி விட்டால், 'மெட்ரோ ரயில்' திட்ட பணி துவங்கும்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படாது.
இதுதொடர்பாக கள ஆய்வு செய்ய, 'மெட்ரோ ரயில்' நிறுவன இணை பொது மேலாளர் நரேந்திரகுமார், சப்-கலெக்டர் கோபால்சாமி மற்றும் 'மெட்ரோ' ஆலோசனை நிறுவனத்தினர் நேற்று கோவை வந்தனர்.
மெட்ரோ வரைபடத்தை வைத்து, டெக்ஸ்டூல் பாலம் முதல் சி.எம்.எஸ்., பள்ளி வரை, எம்.பி., ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், நேற்று கள ஆய்வு செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.51 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் திட்ட குழும நிதியையும் சேர்த்து, பணியை உடனடியாக துவக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.