ADDED : செப் 08, 2026 08:14 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பல்துறை கல்வி கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை, யு.ஐ.டி., கலை, அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பாலகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்வி கண்காட்சியில் மாணவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து பாடப் பிரிவுகளையும் உள்ளடக்கிய, 340 கண்காட்சி மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் செயல் விளக்கங்கள் மற்றும் பற்பல படைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் விளக்கி கூறினர். மேலும், பேரிடர் காலத்துக்கு பின்பு, வயதானவர்கள், குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட கருவிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவு, உடை ஆகியவற்றையும் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். மேலும், பாரம்பரிய இசை மற்றும் நவீன இசை கருவியும், தமிழரின் கலாச்சாரத்தை உணர்த்தும் கீழடி கண்காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தன.
நிகழ்ச்சியில், ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் லதா ஜெகநாதன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் தாளாளர் சித்ரா பாலசுப்பிரமணியன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
