/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.5 கோடியில் மினி ஸ்டேடியம் பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
/
ரூ.5 கோடியில் மினி ஸ்டேடியம் பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ரூ.5 கோடியில் மினி ஸ்டேடியம் பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ரூ.5 கோடியில் மினி ஸ்டேடியம் பணிகள் ஆய்வு விரைந்து முடிக்க நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
ADDED : டிச 26, 2024 10:30 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஐந்து கோடி ரூபாய் செலவில், மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் செயல்படுகின்றன. பள்ளிகளில் மைதானம் போதிய பராமரிப்பின்றி உள்ளன. மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்காகவும், அதை முறைப்படி கற்றுக்கொடுக்க ஒரு இடம் இல்லாததால், அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்த முடிவதில்லை.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 'ஸ்டேடியம்' அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மினி ஸ்டேடியம் அமைக்க கடந்தாண்டு ஜன., மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தன்னார்வலர் வாயிலாக, 2.5 கோடி ரூபாய் பங்களிப்பு தொகையாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மீதம் உள்ள, 2.5 கோடி ரூபாய் அரசிடம் நிதி பெறப்பட்டது.பல்நோக்கு விளையாட்டு அரங்கமாக அமைக்க முடிவு செய்யப்பட்டன. அரசு மற்றும் தன்னார்வலர் நிதியுடன், மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.
அதில், நிர்வாக அலுவலகம், கழிப்பிட வசதி, கேலரி, பார்க்கிங் பகுதி, மின்விளக்கு மற்றும் போர்வெல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை, நகராட்சி கமிஷனர் கணேசன் நேற்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனம் வழங்கிய நிதியோடு அரசின் நிதியும் பெற்று விரைவில், மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. மொத்தம் உள்ள, ஏழு ஏக்கரில், நான்கு ஏக்கரில் இந்த ஸ்டேடியம் அமைக்கப்படும். தாலுகாவில், மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தில், மாநிலத்தில் இங்கு தான் முதலில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கேலரியுடன் பேஸ்கட் பால் ஸ்டேடியம் கட்டப்படுகிறது. கேலரியில், 2,500 பேர் அமர்ந்து பார்க்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.மேலும், 1.4 கோடி ரூபாய் செவில், 'சின்தட்டிக் டிராக்' அமைக்க மாவட்ட கலெக்டர் வாயிலாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மினி ஸ்டேடியம் பணிகள் இரண்டு மாதத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.