/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளுடன் வரவேண்டும்'
/
'புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளுடன் வரவேண்டும்'
ADDED : நவ 18, 2024 09:40 PM

கோவை; ''புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, குடும்பத்துடன் வரவேண்டும்.'' என, வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறினார்.
கோவை மாவட்ட மைய நுாலகத்தில், நுாலக வாசகர்களுக்கு என, சிறப்பு புத்தக கண்காட்சி நடக்கிறது. தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு ஒரு வாரம் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில், புதிய நுால்கள் விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளன.
இங்கு சங்க இலக்கிய நுால்கள், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு நுால்கள், சமீபத்தில் வெளி வந்த நவீன இலக்கிய நுால்கள், நாவல், சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள், சிறுவர் கதைகள் மற்றும் கார்ட்டூன் கதை நுால்கள் என, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுால்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறுகையில், ''நுாலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு இந்த புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாகும். புதிய நுால்கள் வாங்க வேண்டும், வாசிக்க வேண்டும் என, நினைக்கும் வாசகர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வரவேண்டும். அப்போது தான் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு ஏற்படும். போட்டி தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களுக்கு தேவையான நுால்களும் இடம் பெற்று இருப்பது சிறப்பான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
24 ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், வாங்கும் நுால்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.