/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைக்கிடங்கு தீயால் மோசமானது என் சுவாசக்காற்றே! மாநகராட்சி காணுமா நிரந்தர தீர்வு?
/
குப்பைக்கிடங்கு தீயால் மோசமானது என் சுவாசக்காற்றே! மாநகராட்சி காணுமா நிரந்தர தீர்வு?
குப்பைக்கிடங்கு தீயால் மோசமானது என் சுவாசக்காற்றே! மாநகராட்சி காணுமா நிரந்தர தீர்வு?
குப்பைக்கிடங்கு தீயால் மோசமானது என் சுவாசக்காற்றே! மாநகராட்சி காணுமா நிரந்தர தீர்வு?
ADDED : ஏப் 08, 2024 12:29 AM

- நமது நிருபர் குழு -
வெள்ளலூர் அருகே மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, காற்றின் தரம் மோசமடைந்தது. காற்றில் 2.5 நுண்துகளின் அளவு(பி.எம்.,), உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைந்த அளவை விட, 20 மடங்கு அதிகமாகியுள்ளது.
போத்தனுார் செட்டிபாளையம் சாலையில், ஸ்ரீராம் நகர் பகுதியில், கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான, கழிவு நீர் பண்ணை 650 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில், 150 ஏக்கரில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு, நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து எரிந்தது. இதனால், குப்பைக்கிடங்கின் வடகிழக்குப் பகுதியில், புகை மூட்டம் பரவியுள்ளது.
மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலுார் ஆகிய பகுதிகளில், தீ விபத்தால் உருவான புகை மூட்டம் காரணமாக, காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
காற்றின் தரக்குறியீடு, 0 - 50 என்ற அளவில் இருந்தால், அது சுவாசிக்க சுத்தமான காற்று. வெள்ளலுார் சுற்றுப்பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு நேற்று, 170ஐ தாண்டியது. இது மிதமான தரமாகும்.
20 மடங்கு அதிகம்
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, காற்றில் ஒரு கன சதுர மீட்டர் பரப்பில் பி.எம்., 2.5 நுண்துகள்களின் ஆண்டு சராசரி அளவு, 5 மைக்ரோ கிராம். வெள்ளலுார் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம், மாலையில் இருந்து நேற்று மதியத்துக்கு முன்பு வரை இந்த அளவு, 20 மடங்கு அதிகமாக இருந்தது.
காற்றில் நுண்துகள் அளவு
காற்றில் நுண்துகள்(பி.எம்.,) 2.5 என்பது, காற்றில் உள்ள 2.5 மைக்ரோ மீட்டர் சுற்றளவு கொண்ட புழுதி, துகள், அழுக்கு, உலோகப்பொருட்கள், திட மற்றும் திரவப் பொருட்களைக் குறிக்கும். ஒரு மனித முடியின் சுற்றளவு, 50 முதல் 70 மைக்ரோ மீட்டர் அளவு என்பதில் இருந்து, பி.எம்., 2.5 துகளின் அளவை, கற்பனை செய்து கொள்ளலாம். அதேபோல, 15 மைக்ரோ கிராம் அளவில் இருக்க வேண்டிய பி.எம்.,அளவு, 100 மைக்ரோ கிராம் ஆக இருந்தது.
நீடிக்கும் காற்று மாசு
நேற்று மதியம் வரை, காற்றின் தரக் குறியீடு 100க்கும் அதிகமாக இருந்த நிலையில், மதியம் 91 ஆக குறைந்தது. ஆனால், இரவு 7:00 மணியளவில் காற்றின் தரம், 107 என்ற அளவை எட்டியது.
பி.எம்., 2.5 அளவும் பரிந்துரைக்கப்பட்டதை விட, 5.7 மடங்கு அதிகமாக இருந்தது. அதுவும் மாலையில், 7.6 மடங்காக அதிகரித்தது.
இதனால், குப்பைக்கிடங்கின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வரை தீயை அணைக்க முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர். மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது, இது முதன்முறை அல்ல.
எனவே, எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

