UPDATED : நவ 29, 2026 10:32 PM
ADDED : நவ 29, 2026 10:30 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகையை சேர்ந்த பெயின்டர் ராஜேஷ், 26, பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்வதாக, சிறுமுகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சின்னகள்ளிப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த காரை மறித்து சோதனையிட்டதில், உள்ளே இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், வலி நிவாரணி மாத்திரைகளை பெங்களூரில் ரூ.50 ஆயிரத்திற்கு மொத்தமாக வாங்கி, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.400 வீதம் ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்ய ராஜேஷ் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கோவையை சேர்ந்த சதீஷ்குமார், 24, கீர்த்தி ராஜ், 27, ஸ்ரீஹரி, 23, ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 2,000 போதை மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
