/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
தேசிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தேசிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தேசிய திறனறிவு தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஏப் 14, 2025 11:00 PM

மேட்டுப்பாளையம்; தேசிய திறனறிவுத் தேர்வில், மூலத்துறை அரசு பள்ளியை சேர்ந்த, ஐந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாதம் தோறும் உதவித் தொகை வழங்க, தேசிய வருவாய் வழி (என்.எம்.எம்.எஸ்) திறனறிவு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும், 12ம் வகுப்பு முடிக்கும் வரை, மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதன் வாயிலாக, ஒரு மாணவர் நான்கு ஆண்டுகளில், 48 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆண்டுக்கான தேசிய திறனறிவு தேர்வு நடந்தது. இதில் சிறுமுகை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மெர்சில்டா, அன்பு, பத்மப்பிரியா, யோகாசினி, லித்திகா ஆகிய ஐந்து மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட கணித ஆசிரியர் திருமுருகன், ஆங்கில ஆசிரியை மலர்விழி, தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.