/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்பேத்கரை கவுரவிக்க தேசிய சட்டதின விழா!
/
அம்பேத்கரை கவுரவிக்க தேசிய சட்டதின விழா!
ADDED : நவ 25, 2024 10:46 PM
இ ந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவ., 26, அன்று அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
1949, நவ., 26 ல், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. அதன் பிறகு அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26, முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொண்டதற்கு பிறகு, அதை நடைமுறைப்படுத்தவும், சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்கவும் இரண்டு மாதம் எடுத்து கொள்ளப்பட்டது. 1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு இந்தியாவின் சட்டமாக மாறின.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி, தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரின் 125ம் ஆண்டு பிறந்த நாள் விழா, 2015ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது தான் ஆண்டு தோறும் சட்ட தின விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியம், சிந்தனைகளை மக்களிடையே பரப்பவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு சட்ட தின விழா கொண்டாடப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை மாணவர்கள் வாசிக்க செய்தல், வினாடி-வினா, கட்டுரை போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.