ADDED : செப் 24, 2026 07:44 PM
பெ.நா.பாளையம்: மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, துணிப்பை மற்றும் பேப்பர் பைகளை இயற்கை ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
தடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு, சின்ன தடாகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பாலமலை அரங்கநாதர் கோவில் வழியாக செல்லலாம். புரட்டாசியில், பக்தர்கள் அதிகளவு வருவது வழக்கம். பக்தர்கள், பாலிதீன் கவர், பிளாஸ்டிக் கவர், பிஸ்கட் பாக்கெட், சிப்ஸ் பாக்கெட் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என, ஏற்கனவே இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது, வனத்துறை, குருவரிஷி மேல்முடி ரங்கநாதர் கோவில் அறக்கட்டளை மற்றும் வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு குழு ஆகியன இணைந்து, மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் உள்ள பிளாஸ்டிக் பைகளை வாங்கி, அவர்களிடம் பேப்பர் பை மற்றும் துணிப்பை ஆகியவற்றை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், ‘பக்தர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வருவதை தவிர்த்து, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டிலில் கொண்டு வருவது நல்லது. வனவிலங்குகளுக்கு, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை அளிப்பதை தவிர்க்க வேண்டும். மலைப்பாதையை தவிர்த்து, பிற பாதைகளில் செல்லக்கூடாது. மலைப்பாதையை ஒட்டியுள்ள நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வனவிலங்குகளையும், வனத்தையும் பாதுகாப்பதில், கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்றனர்.
