/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
/
கோவில்களில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
ADDED : அக் 03, 2024 05:06 AM

பொள்ளாச்சி : புரட்டாசி அம்மாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கும். துர்க்கை அம்மனை ஒன்பது வடிவங்களான அவதாரத்தில் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடு மற்றும் கோவில்களில் கொலு வைக்கபட்டு, ஒன்பது நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று துவங்கி வரும், 12ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி அம்மன், மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, வராகி, மகாலட்சுமி, மோகினி, சண்டிகாதேவி, சாம்பவி துர்க்கை, நரசிம்மா தாரணி, பரமேஸ்வரி, விஜயாபார்வதி என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
நவராத்திரியையொட்டி தினமும் மாலை, 5:30 மணி முதல் இரவு, 7:30 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இசை நிகழ்ச்சி, வள்ளி, கும்மியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
* ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், கோவில் தீபங்கள் அறக்கட்டளை, பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடம் சார்பில், நவராத்திரி விழா இன்று துவங்கி, 12ம் தேதி வரை அருள்ஜோதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு நாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* பெரிய நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, இன்று மாலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், அலகு சேர்வை செய்து சக்தி அழைத்து கொலு ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை மாலை,6:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, 11ம் தேதி இரவு, 9:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நடக்கிறது.
வரும், 12ம் தேதி காலை, 8:00 மணிக்கு அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல், முளைப்பாரி கொண்டுவருதல், மாவிளக்கு பூஜை, இரவு அம்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 14ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, மாலை நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர்.
இதேபோல், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன்கோவில், சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவில், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.