ADDED : மார் 30, 2026 10:20 PM
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களை நீட் நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்த மாவட்டத்தில் ஐந்து மையங்களில், நாளை முதல் சிறப்பு வகுப்புகள் துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு கட்டாயம். நீட் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
2026ம் ஆண்டுக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. நடப்பாண்டு 630 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி வழங்க மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜ வீதி சி.சி.எம்.ஏ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை வி.ஆர்.டி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் மாணவர்களுக்கு பயிற்சிகள் துவங்குகிறது. இயற்பியல், வேதியியில், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சியளிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
