ADDED : செப் 26, 2025 05:28 AM

மேட்டுப்பாளையம்; நேந்திரன், கதளி வாழைக்காய் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். புதன் கிழமை நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து, 3000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 25 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
மண்டியில் நடந்த ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ அதிகபட்சம், 22 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 35 ரூபாய்க்கும் ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட, ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்வாக ஏலம் போனது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பூவன் ஒரு வாழைத்தார் அதிகபட்சம், 650 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 750க்கும், தேன் வாழை அதிகபட்சம், 850க்கும், செவ்வாழை அதிகபட்சம், 1000 ரூபாய்க்கும், மொந்தன் அதிகபட்சம், 250க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 150 ரூபாய்க்கும் ஏலம் போனது. இத்தகவலை வாழைத்தார் ஏல மண்டியின் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.