/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் நிலையங்களில் நெட் ஒர்க் பிரச்னை
/
தபால் நிலையங்களில் நெட் ஒர்க் பிரச்னை
ADDED : ஜன 17, 2026 05:36 AM
வால்பாறை: வால்பாறையில் உள்ள தபால்நிலையங்களில் நிலவும் நெட் ஒர்க் பிரச்னையால், எஸ்டேட் பகுதி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டம் எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள பொதுமக்கள், எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தபால் நிலையங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்னை தீராத தலைவலியாக இருந்து வருகிறது. வால்பாறை மலைபகுதியில், ஆறு துணை அஞ்சலகங்கள், 22 கிளை அஞ்சலகங்கள் உட்பட, மொத்தம் 28 தபால் நிலையங்கள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறை சுற்றியுள்ள சோலையாறுநகர், கருமலை, அய்யர்பாடி, சின்கோனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, தபால்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், பிரச்னை தீராமல் உள்ளது.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
'வால்பாறையில் உள்ள தபால் நிலையங்களில், பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அவசரத்தேவைக்கு பணம் எடுக்க முடியாமலும், இன்சூரன்ஸ், செல்வமகள் சேமிப்பு திட்டம், டெபாசிட் உள்ளிட்ட கணக்குகளில் பணம் செலுத்த முடியாமல், நாள் கணக்கில் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தபால் நிலையங்களில் தொடர்ந்து நிலவும் நெட் ஒர்க் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில் எஸ்டேட் பகுதியில் கூடுதலாக பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

