தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய மேம்பாலம்

புதிய மேம்பாலம்

புதிய மேம்பாலம்

1


ADDED : செப் 06, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 05:41 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

கோபனாரி பள்ளத்தில் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை

மேட்டுப்பாளையம்: கோபனாரி பள்ளத்தில் புதிய மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்த தோலம்பாளையம் அருகே கோபனாரி மலை கிராமம் உள்ளது. தமிழக–கேரளா எல்லை அருகே உள்ள இந்த கிராமத்தைச் சுற்றி பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், காலனி புதூர், செங்குட்டை, மூனுக்குட்டை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன. அதே போல் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மன்னார்காடு, கோட்டத்துறை, அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோபனாரி அருகில் வாழ்ந்து வருகின்றனர். உணவு பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இரு மாநில மக்களுக்கும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தினமும் காய்கறிகள், வாழைத்தார்கள் என 200 முதல் 300 டன் வரை கோபனாரி எல்லை வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கோபனாரி மற்றும் கேரளா பகுதியான மட்டத்துகாடு நடுவில் கொடுங்கரை பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் தான் இரு மாநில எல்லைகளையும் இணைக்கிறது. அனைத்து நாட்களிலும் இதில் தண்ணீர் செல்கிறது. இந்த பள்ளத்தில் சாலை வசதி இல்லை, மேம்பாலமும் இல்லை. பெரும்பாலும் குறைந்தளவு நீரே இப்பள்ளத்தில் செல்வதால், இரு மாநில மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்களும், வியாபாரிகளும், இப்பள்ளத்தை ஆபத்தான முறையில் வாகனங்கள் வாயிலாகவும், நடந்து சென்றும் கடக்கின்றனர்.

மழைகாலங்களில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் குறைந்ததும் செல்கின்றனர்.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறியதாவது:-

மழைக்காலங்களில் இப்பள்ளத்தில் நீர் வரத்து அதிக மாகிவிடுவதால், தொடர்ந்து இந்த பாதையை உபயோகப்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதன் காரணமாக இருமாநிலங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. 30 கீ.மி., சுற்றி ஆணைக்கட்டி வழியாக செல்ல வேண்டும். இதனால் மழை காலங்களில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் அவதி அடைகின்றோம். மேலும், கோபனாரியில் இருந்து வேலைக்காக கேரளா மாநிலம் மன்னார்காடு, சோழியூர் செல்லும் மக்கள் மழைக்காலங்களில் வேலை வாய்ப்பினை இழக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் மேம்பட இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தர இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதையடுத்து, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, மேம்பாலம் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் கூறுகையில், ‘மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுறுத்தி உள்ளேன். மதிப்பீடு கிடைத்ததும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா கூறுகையில், திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது, என்றார்.

---------

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us