/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க புதிய முயற்சி! ஊராட்சிகளில் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
/
பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க புதிய முயற்சி! ஊராட்சிகளில் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க புதிய முயற்சி! ஊராட்சிகளில் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க புதிய முயற்சி! ஊராட்சிகளில் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
ADDED : அக் 14, 2025 09:31 PM

சூலுார் ; பொது இடங்களில் குப்பை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க, ஊராட்சிகளில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் நிறுவும் பணி தீவிரமாக நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 227 ஊராட்சிகள், 33 பேரூராட்சிகள், ஏழு நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி உள்ளது. பல லட்சம் மக்கள் வசிக்கும் இப்பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு, பல கோடி ரூபாய்களை ஆண்டு தோறும் ஒதுக்கி வருகின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என மக்களிடம் தரம் பிரித்து வாங்கி குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. துவக்கத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்த திட்டம் நாளடைவில் தத்தளித்து வருகிறது.
விழிப்புணர்வு இல்லை குப்பையை தரம் பிரித்து வீடுதேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு வகைகளில் பிரசாரம் செய்தும் பலன் கிடைப்பதில்லை. மக்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே உள்ளது. குப்பை நம் வீட்டில் இருந்து வெளியில் சென்றால் போதும். அதற்கு பிறகு என்ன ஆனால் நமக்கு என்ன என்ற மனநிலையில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
பொது இடத்தில் குப்பை உள்ளாட்சி நிர்வாகங்களின் தூய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை சேகரித்து சென்றாலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் குறைவான பகுதி என்றால், வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குப்பை கொட்டி செல்வதும் நடக்கிறது. அதுவும், குளம், குட்டை, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மக்களும் உள்ளனர்; தொழிற்சாலைகளும் உள்ளன.
தடுக்கும் முயற்சி பொது இடங்களில் குப்பை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோரை கண்டுபிடிக்க உள்ளாட்சி நிர்வாகத்தினர் திணறி வந்தனர். கையும் களவுமாக பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில், குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் புது தொழில்நுட்ப வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
பேசும் கேமராக்கள் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புது தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் நிறுவும் பணி அனைத்து ஊராட்சிகளிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சிகள்) முத்துராஜூ கூறியதாவது:
ஊராட்சிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பொது இடத்தில் குப்பை கொட்ட வருவோரை கேமராக்கள் பதிவு செய்யும். அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட குரலில்,' இங்கு குப்பை கொட்டக் கூடாது.
மீறினால், அபராதம் விதிக்கப்படும்,' என, ஒலிக்கும். இதை கேட்கும் நபர்கள் அங்கிருந்து அகன்று விடுவர். இதன் மூலம் குப்பை கொட்டுவது பெருமளவில் தடுக்கப்படும்.
சூலுார் ஒன்றியத்தில் விமானப்படைத் தளத்தை சுற்றியுள்ள காடாம்பாடி, காங்கயம்பாளையம், கலங்கல் மற்றும் அவிநாசி ரோட்டில் அரசூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.