ADDED : ஜூன் 10, 2026 06:17 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, சென்னை, மதுரை, ராமேஸ்வரம், கேரளத்துக்கு புதிதாக ஒன்பது ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த, 19 கோடி ரூபாயில் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக இரண்டு ரயில் பாதைகள், ஒரு ரயில் பாதை விரிவாக்கம், இரண்டு புதிய பிளாட்பாரங்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன.
தற்போதுள்ள மீட்டர் கேஜ் ஊட்டி ரயில் பாதை மற்றும் பிளாட்பாரத்தின் ஒரு பகுதியில், ஊட்டி ரயிலும், மற்றொரு பக்கம் மெமு பாசஞ்சர் ரயிலும் நிறுத்தப்படுகின்றன.
ஊட்டி ரயில் பாதையை, பிராட்கேஜ் ரயில் பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் தற்போதுள்ள ஊட்டி ரயில் பாதையின் எதிரே, புதிதாக ஊட்டி ரயில் பெட்டிகள் நிறுத்த, மீட்டர் கேஜ் ரயில் பாதையும், புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
