/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிமனைக்கு புதிய டயர்கள் வந்தாச்சு! தொலைதுார பஸ்களுக்கு முன்னுரிமை
/
பணிமனைக்கு புதிய டயர்கள் வந்தாச்சு! தொலைதுார பஸ்களுக்கு முன்னுரிமை
பணிமனைக்கு புதிய டயர்கள் வந்தாச்சு! தொலைதுார பஸ்களுக்கு முன்னுரிமை
பணிமனைக்கு புதிய டயர்கள் வந்தாச்சு! தொலைதுார பஸ்களுக்கு முன்னுரிமை
ADDED : மே 14, 2025 11:38 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பணிமனைகளுக்கு தருவிக்கப்பட்ட புதிய டயர்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், தேய்மானம் அடைந்த டயர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு, தொழிலாளர் நலன், வருவாயைப் பெருக்குவது, விபத்துகளை குறைப்பது, நவீனமயமாக்கம் போன்ற இலக்குகளை மையமாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இருப்பினும், சமீபகாலமாக, 'ஸ்பேர் பார்ட்ஸ்' பழுதான நிலையில் பஸ்கள் இயக்கப்படுவதாக டிரைவர், கண்டக்டர்களின் முறையீடுகள் அதிகம் காணப்படுகின்றன. அதிலும், 40 ஆயிரம் முதல், 70 ஆயிரம் கி.மீ., வரை பயன்பாட்டில் இருக்கும் டயர்கள், மாற்றப்பட வேண்டும் என்பது முக்கிய புகாராகும்.
பல பஸ்களில், தேய்ந்த நிலையில் டயர்கள் இருப்பதால், அடிக்கடி பஞ்சராகி, நடுவழியில் நின்று விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, பணிமனைக்கு தலா, 30 புதிய டயர்கள் தருவிக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தின் பல பகுதிகளில், அரசு பஸ் டயர் வெடித்தது, டயர் கழன்று ஓடியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், பொள்ளாச்சி பணிமனைகளில் டயர் பராமரிப்பு குறித்து, டிரைவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது.
டயர் ஓடுதளப்பகுதி குறிப்பிட்ட அளவு குறைந்து விட்டால் மாற்றப்பட வேண்டும். டயர் அழுத்தம், சீரான தன்மை மற்றும் டயரில் ஏதேனும் வெடிப்பு அல்லது காயம் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வகையில், பணிமனைகளில் உள்ள பஸ்களின் டயர் தேய்மானம் அடைந்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து 'ரீ மோல்டு' செய்யப்பட்ட டயர் தருவிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. தற்போது, புதிய டயர்கள் தருவிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், தேய்மானம் அடைந்த டயர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.
இவ்வாறு, கூறினர்.