/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய உக்கடம் மேம்பாலம்...இது எங்க பாலம்! துவக்கி வைத்தார் ஸ்டாலின்: இனிப்பு வழங்கினார் வேலுமணி
/
புதிய உக்கடம் மேம்பாலம்...இது எங்க பாலம்! துவக்கி வைத்தார் ஸ்டாலின்: இனிப்பு வழங்கினார் வேலுமணி
புதிய உக்கடம் மேம்பாலம்...இது எங்க பாலம்! துவக்கி வைத்தார் ஸ்டாலின்: இனிப்பு வழங்கினார் வேலுமணி
புதிய உக்கடம் மேம்பாலம்...இது எங்க பாலம்! துவக்கி வைத்தார் ஸ்டாலின்: இனிப்பு வழங்கினார் வேலுமணி
ADDED : ஆக 10, 2024 11:31 PM

கோவை:அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் துவங்கி, தி.மு.க., ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை, இரு கட்சியினரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைத்தார். நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர், பாலத்தில் பயணித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கொண்டனர்.
நேற்று உக்கடம் மேம்பாலத்தை பார்வையிட, முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அ.தி.மு.க.,வினரை கண்டதும் கோவை போலீசார் கெடுபிடி காட்டினர்.
மேம்பாலத்தில் வாகனங்களில் செல்லலாம்; ஆய்வு செய்கிறோம் என்று பார்வையிடக் கூடாதென அறிவுறுத்தினர். ஆத்துப்பாலம் மற்றும் உக்கடம் பகுதியில், அ.தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது; அதை அகற்ற போலீசார் அறிவுறுத்தினர்.
இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 'இந்த பாலம் கட்டியதே நாங்கள்தான்; நாங்கள் கொடி கட்டக்கூடாதா' என, அ.தி.மு.க.,வினர் ஆவேசமாக குரல் எழுப்பினர்.
ஆத்துப்பாலத்தில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடிக்க முயன்றனர். போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம், பட்டாசை பறிமுதல் செய்தார். அவரை அ.தி.மு.க.,வினர் சுற்றிவளைத்ததால், போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
'போலீஸ் ஒழிக' என கட்சியினர் கோஷம் எழுப்பியதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார் காட்டிய கெடுபிடியால், அ.தி.மு.க.,வினர் கோபம் அடைந்தனர்.
வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கி, முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது; ஓராண்டுக்குள் பணியை முடித்திருக்கலாம். இன்னும் வேலை முழுமையாக முடியவில்லை.
வாலாங்குளம் சாலையில் இறங்கு தளம் அமைக்க வேண்டும். இரு இடங்களில் அகலம் குறைவாக இருக்கிறது; விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால், அப்பகுதியை அகலப்படுத்த வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினரிடம் கூறியிருக்கிறேன். வாகனங்கள் திரும்பும் இடங்களில், சாலை பாதுகாப்பு அறிவிப்புகள் வைக்க வேண்டும்.
தண்ணீர் வீணாகிறது
அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த திட்டங்களை, இன்னும் செயல்படுத்தாமல் இருக்கின்றனர். அவிநாசி - அத்திக்கடவு திட்டம் கொண்டு வந்தோம்; ஆற்றில் தண்ணீர் வந்து கடலுக்கு செல்கிறது. அத்திட்டத்தை செயல்படுத்தி, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது; அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் தண்ணீர் வரவில்லை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்திய குளங்களை, மாநகராட்சி தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேற்குப்புறவழிச்சாலை திட்ட பணியை வேகப்படுத்த வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்த அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது; கையகப்படுத்தும் பணி அப்போதே ஓரளவு முடிந்தது. இன்னும் அப்பணியை முடிக்காமல் இருக்கின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும். அப்போது தான் வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவையை அதிகரிக்க முடியும். தொழில் வளர்ச்சி அடையும்; அதிக நிறுவனங்கள் கோவைக்கு வரும்; வேலைவாய்ப்பு பெருகும்.
இவ்வாறு, வேலுமணி கூறினார்.