/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டத்துக்கு 8 லட்சம் பனை விதை'கற்பகதரு' காப்போம்!
/
மாவட்டத்துக்கு 8 லட்சம் பனை விதை'கற்பகதரு' காப்போம்!
மாவட்டத்துக்கு 8 லட்சம் பனை விதை'கற்பகதரு' காப்போம்!
மாவட்டத்துக்கு 8 லட்சம் பனை விதை'கற்பகதரு' காப்போம்!
ADDED : செப் 11, 2019 06:35 AM

ஆனைமலை;தமிழகத்தில், அழிந்து வரும் மாநில மரமான பனை மரங்களை காக்க மாவட்டம் முழுவதும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர், எட்டு லட்சம் பனை மரங்கள் நடவு செய்ய உள்ளனர். பனை மரங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுத்து உள்ளனர்.தமிழரின் அறம், வாழ்வியல், கொடை, வீரம் உள்ளிட்ட பலவற்றை கற்றுத்தரும் சங்க இலக்கியங்கள், பனை ஓலைகளில் எழுதப்பட்டவை.
சங்க காலம் முதலே பனை, தமிழரின் வாழ்வியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், மாநில மரமாக பனை மரம் தேர்வு செய்யப்பட்டது.நாம் பயன்படுத்தும் கூடை, மொரம் உள்ளிட்டவை, பனை ஓலையால் செய்யப்பட்டவை. பனையில் நுங்கு, பதநீர் கிடைக்கிறது; கோடை காலத்தில் இவை மக்களுக்கு பல்வேறு பயன்கள் தருகின்றன.மேலும், கருப்பட்டி, கற்கண்டுகள் தயாரித்து விற்பனை செய்து பலரும் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்கின்றனர். அடி முதல் நுனி வரை பனையின் அனைத்தும் பாகங்களும் பயன் தருவதால், 'கற்பகதரு' எனவும் அழைக்கப்படுகிறது. பனை மரங்கள் இல்லையென்றால், உலக அளவில் தமிழரின் கலாசாரத்தை பறைசாற்றும் சங்க இலக்கியங்களும் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு.விவசாய நிலங்களில் மண் அரிப்பை தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க வரப்புகளிலும், கிராமங்களிலும் பனைகள் இருந்தன. விவசாய நிலங்களில் பனைகள் அழிப்பு, பனை குறித்த முக்கியத்துவம் அறியாமை உள்பட பல்வேறு காரணங்களால், தமிழகம் முழுவதும் பனை மரங்கள் அருகி வருகின்றன.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்ததும், பனை ஓலையில் வேயப்பட்ட பொருட்களின் பயன்பாடு பெருமளவு குறைந்ததும், பனையின் அழிவுக்கு காரணமாக உள்ளது.
காடுகள் அழிப்பால் வாழிடங்களை பறிகொடுத்த பல பறவைகளுக்கு, எஞ்சியுள்ள பனை மரங்கள் வாழ்வு கொடுத்து வருகிறது. தற்போது, பனை மரங்களை காக்க பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பனை மரங்களை பாதுகாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், எட்டு லட்சம் பனை விதைகள் நடவு செய்து பராமரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.இதில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரம் என, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் மட்டுமே, 2.5 லட்சம் பனை விதைகள், நீர் நிலைகள் அருகிலும், விவசாய நிலங்களிலும் நடவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.தற்போது, ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பனை விதைகள் அனுப்பப்பட்டு வருகிறது. சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் அந்தந்த ஒன்றிய வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து, இலவசமாக பனை விதைகள் பெற்று நடவு செய்ய அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
பதிவு செய்தால் விதை இலவசம்!கோவை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் உமாராணி கூறுகையில், ''குளக்கரைகள், நீர் நிலைகள் அருகிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், தோட்டக்கலைத்துறை மூலம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். ஒரு வட்டாரத்துக்கு, 25 ஆயிரம் வீதம், மாவட்டத்திலுள்ள, 12 வட்டாரங்களுக்கு, மூன்று லட்சம் பனை விதைகள் வழங்கப்படுகிறது,'' என்றார்.
கோவை வேளாண் இணை இயக்குனர் டாம் பி சைலேஸ் கூறியதாவது:ஆனைமலை, தொண்டாமுத்துார் தவிர, கோவை மாவட்டத்தில் உள்ள, பத்து வட்டாரங்களில், மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில், ஐந்து லட்சம் பனை விதைகள் வளர்க்கப்படுகிறது.ஒரு வட்டாரத்துக்கு, 50 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்படும். ஒரு பனை விதை, நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மானாவாரி திட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில், வரப்புகளிலும், புறம்போக்கு நிலங்களிலும், பனை வளர்க்கப்படும். வட்டார அலுவலகத்தில் பதிவு செய்தால், இலவசமாக பனை விதைகள் வழங்கப்படும்.இவ்வாறு. தெரிவித்தார்.