/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூண்டு விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
/
பூண்டு விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மே 19, 2025 11:14 PM
மேட்டுப்பாளையம்; வெள்ளைப் பூண்டின் விலையில், உயர்வு ஏதும் இல்லாததால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில், வெள்ளை பூண்டு அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் வெள்ளைப் பூண்டின் அறுவடை சீசன் துவங்கியது. ஜூன் மாதம் முதல் வாரம் வரை அறுவடை நடைபெறும்.மேட்டுப்பாளையத்தில் பத்துக்கு மேற்பட்ட பூண்டு மண்டிகள் உள்ளன.
நீலகிரியில் விளையும் பூண்டுகள், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம், மண்டிகளுக்கு, நீலகிரி மாவட்ட விவசாயிகள், 1,400க்கும் மேற்பட்ட பூண்டு மூட்டைகளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர். விலையில் உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பூண்டு மண்டி உரிமையாளர்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளுக்கு, 1,400 பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. நன்கு முதிர்ந்த பெரிய பல்லுடைய ஒரு கிலோ பூண்டு அதிகபட்சம், 120 ரூபாய்க்கு, சிறிய பல் பூண்டு குறைந்த பட்சம், 20 ரூபாய்க்கும் ஏலம் போனது. மழையின் காரணமாக பூண்டு வரத்து குறைவாகவும், முதல் தரமான பூண்டு வரத்து இல்லை.
அதனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம், ஒரு கிலோவிற்கு, 15 ரூபாய் விலை குறைந்து விற்பனை ஆனது. சீசன் முடியும் தருவாயில் உள்ளதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும், வருகிற வாரம் விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பூண்டு மண்டி உரிமையாளர்கள் கூறினர்.