ADDED : செப் 11, 2026 07:44 PM
குப்பையில் மின்சாரம் தயாரிப்பு மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு
கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 2 கூட்டங்கள் களேபரமானதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கூட்டம் துவங்கியவுடனே மேயர் ரங்கநாயகி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் தங்களின் பிரச்னைகளை முன்பே மனுவாக வழங்க வேண்டும். மேடை அருகே யாரும் வரக்கூடாது. அவரவர் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும் என்றார்.
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், சிறந்த மாநகராட்சிக்கான விருது நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரநிதிகளை அழைத்து விருது கொடுக்காத த.வெ.க. அரசுக்கு கண்டனம் என்றார்.
காங்., கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயபால் எதிர்த்து பேசியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேனர் ஏந்தி போராடினர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழு தலைவர் பிரபாகரன் அளித்த பேட்டியில், குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் டில்லி, ஐதராபாத், பெங்களூர், மணலி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு தோல்வியடைந்தது. அதிலிருந்து வெளியேறும் காஸ், மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். கோவையை ஹிரோஷிமா நாகசாகியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றார்.
தி.மு.க., கம்யூ., கவுன்சிலர்களும் அத்திட்டத்தை எதிர்த்தனர். தி.மு.க. கவுன்சிலர்கள் குழு தலைவர் கார்த்திகேயன், வெள்ளலூர் குப்பை கிடங்கால் ஏற்கனவே கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராடுவோம் என்றார்.
கமிஷனர் ரவி தேஜா, குப்பையை அகற்றுவதே திட்டத்தின் நோக்கம். இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அனைவரின் கருத்தையும் கேட்டு முடிவு செய்யப்படும் என கூறினார்.
திட்டத்தை கைவிட கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேயர் ரங்கநாயகி, டெண்டர் நடைமுறையை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
ரூ.50 லட்சம் மதிப்பில் ரோடுகளில் பேட்ச் ஓர்க், சுகாதாரப்பணி, காலி இடங்களில் குப்பை கொட்டுவதற்கு வரி உள்பட மன்றத்தில் வைத்த பல பொருள்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். டெண்டரே விடாமல் கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என புகார் கூறினர்.
கமிஷனர் ரவி தேஜா, திட்டங்களை நிறைவேற்றவில்லை என்கிறீர்கள். கொண்டு வந்தால் இத்திட்டம் வேண்டாம் என்கிறீர்கள். இப்படியே போனால் மாநகராட்சி முடங்கிவிடும் என்றார்.
நேற்றைய கூட்டத்தில் 128 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
