ADDED : செப் 14, 2026 08:42 PM
வால்பாறை: வால்பாறை நகரில் பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலையடுத்து, கோவை மாவட்டம் வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
அவர்கள் தங்கிச்செல்ல வசதியாக, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
வாரவிடுமுறை நாட்களில் கூட வால்பாறைக்கு, அதிக அளவில் சுற்றுலாபயணியர் வரத்துவங்கியுள்ளனர். தற்போது வால்பாறையில் சிதோஷ்ண நிலை மாற்றத்தால், குளு குளு சீசன் துவங்கியுள்ளதால், இயற்கையை ரசிக்க அதிக அளவில் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வால்பாறை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலாபயணியர் கூறுகையில், ‘தொலை துாரத்திலிருந்து வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க குடும்பத்துடன் வருகிறோம். ஆனால் மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல், வீதியில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, வால்பாறை நகரில் நகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.
