/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்
/
பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்
பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்
பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்
ADDED : மார் 18, 2025 05:37 AM

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, குறைகளை தீர்த்து வைக்க வேண்டியது, துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை. ஆனால் நடவடிக்கை தாமதமாவதால், மக்களிடமிருந்து மனுக்கள் குவிந்து வருவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்ப்புக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
உரிய நடவடிக்கை எடுக்க, அம்மனுக்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு மனுவையும் பரிசீலித்து, நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு வாரமும் இதுதான் நடக்கிறது. பிரச்னைகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தது மாதிரி தெரியவில்லை. தீராத பிரச்னைகள் அடங்கிய கனத்த பைல்களுடன், பொதுமக்களும் வாரா வாரம் தவறாமல், மனு அளிக்க வந்து விடுகின்றனர்.
வீடு, பட்டா கேட்டு மனுக்கள்
வீட்டுமனை பட்டா, இலவச வீடு கேட்டு வரும் மனுக்களுக்கும் குறைவில்லை.
நேற்று மட்டும் இலவச வீடு கேட்டு, 205 மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு, 186 மனுக்களும், வேலை வாய்ப்பு கேட்டு 7 மனுக்களும், இதர மனுக்கள் 196 என்று மொத்தம் 588 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இப்படி வாராவாரம் மனுக்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவது, செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது.
விடாமல் படை எடுப்பவர்கள் இதோ சில உதாரணங்கள்
n கிணத்துக்கடவு, வலசுபாளையம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சஜீனா, மூன்று ஆண்டுகளாக பட்டா, சிட்டாகேட்டு தொடர்ந்து மனுக்களை சமர்ப்பித்துவருகிறார். வருவாய்த்துறை அதிகாரிகள் இவரது மனுக்களை தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறுகிறார்.
n கோவைப்புதுார் அறிவொளி நகரை அடுத்து உள்ளது, மலைநகர் மற்றும் அண்ணாநகர். இங்கு மொத்தம் 37 பிளாக்குகளில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் மற்றும் போர்வெல் நீர், சரியான நேரத்துக்கு வினியோகிப்பதில்லை. குப்பை அகற்றப்படுவதில்லை. மருத்துவம், சுகாதாரம் இங்கு கேள்விக்குறியாகவே உள்ளதாக, இங்கு குடியிருப்போர் மனு அளிக்க வருகின்றனர்.
n காட்டம்பட்டி வடசித்தூர் ஜல்லிப்பட்டி செஞ்சேரிமலை வார சந்தை இடத்தை சிலர் ஒப்பந்தம் எடுத்து, வாரச்சந்தை ஏலம் எடுத்து சுங்கம் வசூலிக்கின்றனர். ஆனால் ரசீது வழங்குவதில்லை. சந்தையில் மின்விளக்கு வசதி இல்லை. ஆனால் வியாபாரிகளிடம், 700 முதல் 1,400 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும், மனு அளிக்கின்றனர்.