உட்கார இருக்கைகள் இல்லை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
உட்கார இருக்கைகள் இல்லை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
ADDED : செப் 06, 2026 05:11 PM
அன்னூர்: கோவை–சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், அவிநாசி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னூர் உள்ளது. அரசு மற்றும் தனியாரை சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் அன்னூர் வழியாக பலமுறை இயங்கி வருகின்றன.
அன்னூர் நகரில் தாலுகா அலுவலகம், கோர்ட், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கருவூலம் மற்றும் 14 வங்கி கிளைகள் உள்ளன. பல ஆயிரம் பயணிகள் அன்னூர் பஸ் ஸ்டாண்டை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டின் கிழக்கு பகுதியில் கோவை, சரவணம்பட்டி, கோவில்பாளையம் செல்லும் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. மேற்குப் பகுதியில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தால் பஸ் வரும்போது திடீரென குறுக்கே சென்று பஸ்ஸில் ஏற முடிவதில்லை. பல லட்சம் ரூபாய் செலவழித்து பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருக்கைகள் அமைக்கப்படாததால் கோவை பஸ்கள் வரும் வரை பயணிகள் கால் எடுக்க நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
