/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பற்றாக்குறை பாசன நீரை பயன்படுத்த வழியில்லை: குளத்தில் சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
பற்றாக்குறை பாசன நீரை பயன்படுத்த வழியில்லை: குளத்தில் சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பற்றாக்குறை பாசன நீரை பயன்படுத்த வழியில்லை: குளத்தில் சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பற்றாக்குறை பாசன நீரை பயன்படுத்த வழியில்லை: குளத்தில் சேமிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2024 11:54 PM

உடுமலை, : உடுமலை மருள்பட்டி குளத்திற்கு நீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்திற்கு, இரு சுற்றுக்கள் உயிர்த்தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது. முழு பாசன காலத்திற்கு நீர் வழங்காததால், பயிர் சாகுபடி செய்ய முடியாமல், தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களுக்கு மட்டும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தற்போது திறக்கப்பட்டுள்ள நீரில், தங்களுக்கான ஒதுக்கீட்டு நீரை, அருகிலுள்ள, குளம், குட்டைகளுக்கு வழங்கினால், வரும் கோடை காலத்தை சமாளிப்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பாசன பகுதிகளிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், வழியோரத்திலுள்ள நுாற்றுக்கணக்கான குளம், குட்டைகள் நீர்வரத்து பெற்று, நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. வரும் கோடை காலத்தில், கிராமங்களில் கடும் வறட்சி மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மருள்பட்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
மருள்பட்டி, சாளரப்பட்டி, கருப்புச்சாமி புதுார் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக, மருள்பட்டி குளம் உள்ளது.
மருள்பட்டி பகிர்மான கால்வாயின் கீழ், 4ம் மண்டல பாசனத்தில், 1,466 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலை காணப்படும் நிலையில், தற்போது இரு சுற்று மட்டுமே நீர் திறக்கப்படுவதால், பெரும்பாலான நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளவில்லை.
வரும் காலங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளதால், எங்களுக்கு வழங்கப்படும் நீரை, சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், குளத்தில் சேமித்து வைக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இதன் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியும்.
எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நீரை மட்டும், நாங்கள் குளத்தில் சேமித்து வைக்கும் வகையில், கால்வாய் மடையை திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.