/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நஞ்சில்லா உணவு! உற்பத்திக்கு உதவும் கண்காட்சி கொடிசியா அரங்கில் நடக்கிறது
/
நஞ்சில்லா உணவு! உற்பத்திக்கு உதவும் கண்காட்சி கொடிசியா அரங்கில் நடக்கிறது
நஞ்சில்லா உணவு! உற்பத்திக்கு உதவும் கண்காட்சி கொடிசியா அரங்கில் நடக்கிறது
நஞ்சில்லா உணவு! உற்பத்திக்கு உதவும் கண்காட்சி கொடிசியா அரங்கில் நடக்கிறது
ADDED : நவ 20, 2025 04:31 AM

கோவை;தற்போது விளை விக்கப்பட்டு வரும் பல வேளாண் விளை பொருட்களில், சில ரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இயற்கை விவசாயமே இப்பிரச்னைக்கு தீர்வு என்று கூறுகிறது, கோவை கொடிசியா அரங்கில் நடந்து வரும் இயற்கை வேளாண் கண்காட்சி.
கோவை 'கொடிசியா' அரங்கில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. பிரதமர் மோடி துவக்கிவைத்த இம்மாநாட்டில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, ஏழு விவசாயிகள் 'நம்மாழ்வார்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் பல்வேறு வல்லுனர்கள், வேளாண் பல்கலை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இன்றும், நாளையும் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, இயற்கை வேளாண்மை குறித்த கண்காட்சி, கொடிசியா ஏ, பி அரங்குகளில் நடக்கிறது.
இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 130க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
வாழை நார்களில் தயாரிக்கப்பட்ட மாலை உள்ளிட்ட பொருட்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. தென்னை, பனை மரத்தில் கிடைக்கும் உணவு பொருட்கள், ஓலைகளின் பயன்பாடு குறித்த ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ''கண்காட்சியில் வேளாண் உற்பத்தி பொருட்கள், இயற்கை உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு மேற்கொள்ள வேண்டியவை குறித்து, இதில் அறிந்துகொள்ளலாம். அரிசி, நெல் போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் குறித்தும் அறிந்துகொள்ள, இந்த கண்காட்சி உதவும்,'' என்றார்.

