/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கொப்பரை உலர்களங்கள்
/
ஊருக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கொப்பரை உலர்களங்கள்
ஊருக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கொப்பரை உலர்களங்கள்
ஊருக்கு திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கொப்பரை உலர்களங்கள்
ADDED : டிச 23, 2025 07:22 AM

பொள்ளாச்சி: அசாம் மாநிலத்துக்கு தொழிலாளர்கள் திரும்புவதால், கொப்பரை உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கொப்பரை களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, தேங்காய், கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி பாதித்ததால், கொப்பரை உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. அதில், 25 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இந்நிலையில், அசாம் மாநிலத்தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதால் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில், தேங்காய் உரிப்பு, கொப்பரை உற்பத்தி, வாகனங்களில் மட்டை ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும், அசாம் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொப்பரை உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு இருந்தன. குறைந்தளவு மட்டுமே தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது, அசாம் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) நடைபெறுகிறது. இப்பணிக்காக தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தங்களது சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாமலும் செல்லத்துவங்கி விட்டனர். இவர்கள், தற்போது சொந்த ஊருக்கு சென்று தேர்தல் முடிந்த பின், ஏப். மாதம் வேலைக்கு வருவதாக கூறிச் சென்றனர்.
ஏற்கனவே, குறைந்தளவு நடந்த கொப்பரை உற்பத்தியும், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சீசன் துவங்கினாலும் தொழிலாளர்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
எனவே, கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டால் வரும் காலத்தில் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, கூறினார்.

