/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியேறும் போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
/
குடியேறும் போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
குடியேறும் போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
குடியேறும் போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்
ADDED : பிப் 22, 2024 04:51 AM
அன்னுார்: இலவச வீட்டுமனைப்பட்டா கோரி, தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த வந்த மக்கள், பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில், ஒன்றாவது வார்டில், குடியிருக்கும் 50 குடும்பங்களுக்கு, சொந்த வீடோ, சொந்த இடமோ இல்லை. இப்பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா அல்லது தொகுப்பு வீடு கோரி, 10 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.எல்.ஏ., -- எம்.பி., மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்து வந்தனர்; எனினும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆவேசமடைந்த மக்கள், நேற்று, அன்னுார் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நேற்று, வார்டு உறுப்பினர் தமிழரசி சதீஷ்குமார் தலைமையில், 40 பேர் தாலுகா அலுவலகம் வந்தனர். அவர்களுடன் தாசில்தார் நித்திலவள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலவச பட்டா மற்றும் தொகுப்பு வீடு இல்லாதவர்கள் தனித்தனியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, 40 குடும்பத்தினரும் தனித்தனி விண்ணப்பம் எழுதிக் கொடுத்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'சொந்த வீடு இல்லாததால் பலர், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களாக வசித்து வருகிறோம். சிலர் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். வாடகை செலுத்த முடியாத நிலை உள்ளது. கூலி வேலைக்கு சென்று வரும் எங்களுக்கு, விரைவில் இலவச வீட்டு மனைப்பட்டா அல்லது தொகுப்பு வீடு வழங்க வேண்டும்' என்றனர்.
பேச்சுவார்த்தையில் துணை தாசில்தார்கள் ஆகாஷ்குமார், ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.