இனி, குடிநீர் தடையின்றி கிடைக்கும்! மேம்பாட்டு பணி தீவிரம்
இனி, குடிநீர் தடையின்றி கிடைக்கும்! மேம்பாட்டு பணி தீவிரம்
ADDED : செப் 10, 2026 05:02 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர் வினியோகம் தடையின்றி வழங்கும் வகையில் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் அருகே ஆழியாறு ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரித்த பின் மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும், 11 மில்லியன் லிட்டர் நீர் வினியோகிக்கப்படுகிறது.
நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.
அம்பராம்பாளையம் ஆற்றில் கட்டப்பட்ட நீரேற்று நிலையம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கட்டடத்தின் வலிமை இழந்து அதன் செயல்திறன் குறைந்தது. இதையடுத்து, புதுப்பிக்க அரசிடம் நிதி கேட்கப்பட்டது. இதையடுத்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 24.50 கோடி ரூபாய்க்கு குடிநீர் மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதில், அம்பராம்பாளையத்தில் தற்போது, 14 மில்லியன் கனஅடி நீர் சுத்திகரிப்பு செய்வதற்கு மாற்றாக, புதியதாக, 26 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடக்கிறது. மார்க்கெட் ரோடு புதிய நீருந்து நிலையத்தில் 22 கே.வி., மின பெட்டகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.
அதில், பழைய சிமென்ட் குடிநீர் குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய் மார்க்கெட் ரோடு முதல் மகாலிங்கபுரம் வரை, ஒன்றரை கி.மீ.,க்கும்; மார்க்கெட் ரோடு முதல் ஜோதிநகர் வரை, இரண்டரை கி.மீ.,க்கும் புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வினேியாகம் நிறுத்தப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஸ்டேட் பாங்க் அருகே மற்றும் அருட்செல்வர் மகாலிங்கம் ரோட்டிலும் புதிய குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக இப்பணிகள் மேற்கொள்வதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
