/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகரில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
/
புறநகரில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புறநகரில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புறநகரில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : நவ 19, 2024 11:44 PM
தொண்டாமுத்தூர்; கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர் பகுதிகளில், நம்பர் லாட்டரி விற்பனை கட்டுக்கடங்காமல் நடந்து வருவதால், ஏழை குடும்பங்கள், வருமானங்களை இழந்து கண்ணீர் விடுகின்றனர். இதை தடுக்க எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையின் மேற்கு புறநகர் பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியில், சுமார், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிகம் உள்ளதால், கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில், தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை, காருண்யா நகர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இங்குள்ள கூலித்தொழிலாளர்கள், தங்களது தினசரி சம்பள பணத்தை, டாஸ்மாக் கடைகளில் செலவழித்து வருவதால், வீடுகளில் உள்ள பெண்கள், குடும்ப செலவிற்கு பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, நம்பர் லாட்டரி விற்பனை புற்றீசல் போல பெருகி வருகிறது.
ஏற்கனவே, தங்களின் சம்பாத்தியத்ததை டாஸ்மாக் கடையில் கொடுத்து விடும் ஏழைகள், மீதமுள்ள பணத்தையும், நம்பர் லாட்டரியில் விட்டு செல்வதால், குடும்ப செலவுகளுக்கு கூட பணமில்லாமல் குடும்ப பெண்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். சட்டவிரோத நம்பர் லாட்டரி விற்பனை, போலீசாரின் ஆசியோடு நடப்பதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது, போலீசார், வழக்குபதிவு செய்கின்றனர்.
இருப்பினும், கைது செய்பவர்களை சொந்த ஜாமினில் விடுவதால், சிறை தண்டனையும் கிடைப்பதில்லை. இதனால், வருமானத்தை இழக்க விரும்பாமல், அந்நபர்கள், மீண்டும், மீண்டும் நம்பர் லாட்டரி விற்பனையை தங்குதடையின்றி செய்து வருகின்றனர்.
எனவே, ஏழை குடும்பங்களின் கண்ணீரை துடைக்க, வழக்குப்பதிவு செய்வதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தில், அவர்களை சிறையில் அடைக்கவும் ரூரல் எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்போதுதான், சட்டவிரோத நம்பர் லாட்டரி விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.