/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை ஊடுபயிரான ஜாதிக்காய் மரங்கள்... வறட்சிக்கு தப்பவில்லை!இலைகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
/
தென்னை ஊடுபயிரான ஜாதிக்காய் மரங்கள்... வறட்சிக்கு தப்பவில்லை!இலைகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
தென்னை ஊடுபயிரான ஜாதிக்காய் மரங்கள்... வறட்சிக்கு தப்பவில்லை!இலைகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
தென்னை ஊடுபயிரான ஜாதிக்காய் மரங்கள்... வறட்சிக்கு தப்பவில்லை!இலைகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
ADDED : மே 07, 2024 10:41 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், மழை பொழிவின்றி கடும் வறட்சி நிலவுவதால், தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட, ஜாதிக்காய் மரங்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி இளநீரை போன்று, ஜாதிக்காய்க்கும் சந்தையில் தனி சிறப்பு உள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில், ஜாதிக்காய் விவசாயிகள் 150 பேர் உள்ளனர். தென்னை மரங்களில், ஊடுபயிராக ஜாதிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.
நான்கு தென்னை மரங்களுக்கு நடுவில், இந்த மரங்கள் நடவு செய்யப்படுகின்றன. தென்னை மரத்தின் நிழல் ஜாதிக்காய் மரங்களுக்கு மிக அவசியமாகும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல், நவ., மாதம் வரை ஜாதிக்காய் அறுவடை காலமாக உள்ளது.
விவசாயிகள் குழுவாக இணைந்து, ஜாதிக்காய் சேகரித்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் ஜாதிக்காயை விட, பொள்ளாச்சி ஜாதிக்காய் தரமாக இருப்பதால் அதிக விலையும் கிடைக்கிறது.
இந்நிலையில், வறட்சிக்கு தென்னை மரங்களை போன்று, ஜாதிக்காயும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாதிக்காய் மரங்களில் உள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து விடுகின்றன. இலைகள் உதிர்ந்து மரத்தில் உள்ள காய்கள் மட்டுமே தென்படுகின்றது.
பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரஞ்சித்குமார் கூறியதாவது:
சொட்டுநீர் பாசனம் முறையில் ஜாதிக்காய் மரங்களுக்கு அதிகம் தண்ணீர் பாசனம் செய்தாலும், கூடுதல் வெப்பத்தை தாங்க முடியாமல் மரம், 'தெர்மல் ஸ்ட்ரெஸ்' உண்டாகி காய்ந்து விடுகிறது.
இலை அதிகமாக உதிரும் ஜாதிக்காய் மரங்களில் உள்ள அனைத்து காய்களையும், விவசாயிகள் அகற்றி விட வேண்டும்.இல்லையெனில், இந்த மரங்கள் இறந்து விடும். இவ்வாறு செய்தாலும் கூட, மரம் பழைய ஆரோக்கியமான நிலையை அடைய இரண்டு ஆண்டுகளாகும்.
வளர்ச்சியடையாமல் அறுவடை செய்யப்பட்ட ஜாதிக்காயையும் சந்தைப்படுத்த முடியும் என்பதால், விவசாயிகள் அதிகமாக காய் பிடித்திருக்கும் மரங்களில் இருந்து காய்களை அகற்றுவது முக்கியமானது.
இவ்வாறு முழுமை அடையாமல் அறுவடை செய்யப்படும் ஜாதிக்காய் கிலோ, 150 ரூபாய் விலைக்கு சந்தைப்படுத்த முடியும்.
விவசாயிகள் ஜாதிக்காய் மரங்களை காப்பாற்றும் கவலையில், பூச்சி மருந்து கடைகளில் கொடுக்கும் பல இலை வழி தெளிப்பு தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இலை வழி தெளிப்பு வாயிலாக, ஜாதிக்காய் மரத்துக்கு நன்மை நடக்கிறதா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாளும் போது, எதிர்பார்க்கும் விளைவு கிடைப்பதில்லை. இதனால், மீண்டும் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிப்படைகின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சந்தையில் கிடைக்கும் இலை வழி தெளிப்பு இடுபொருட்களை ஆராய்ந்து, அவற்றால் பயனுள்ளதா என்பதை கண்டறிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், கோடை வெப்பத்தை சமாளிக்கும் விதமாக, ஜாதிக்காய் விவசாயிகளுக்கு பரிந்துரைகளும், பயிற்சிகளும் வேளாண் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

