UPDATED : நவ 29, 2026 07:11 PM
ADDED : நவ 29, 2026 07:08 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ‘பார்க்கிங்’ செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதியில், வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்துள்ளது. வர்த்தக நிறுவனங்களில், ‘பார்க்கிங்’ வசதியில்லாததால், வாகனத்தில் வருவோர், ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இப்பிரச்னையால், அவ்வப்போது நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே, ரோட்டோரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், ‘நகரில் நெரிசலை தவிர்க்க, ரோடுகள் விரிவாக்கம் செய்தாலும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. பல இடங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்வதால், நெரிசல் ஏற்பட்டு அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் அத்துமீறி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்குரிய தீர்வு காணும் வகையில் அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
