/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு; அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்
/
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு; அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு; அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு; அகற்றிக்கொள்ள வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2024 11:58 PM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில் தள்ளுவண்டி கடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி பகுதியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தபால் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு எடுக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, மீன்கரை ரோட்டில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தள்ளுவண்டி கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், டெம்போ ஸ்டாண்ட், பூக்கடைகள் உள்ளிட்ட தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி தாசில்தார் மேரி வினிதா தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரத்னகுமார், ராஜேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர் அருணகிரி, நகரமைப்பு அதிகாரி சீனிவாசன், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் கவுதம், செந்தில்குமார் மற்றும் உதவி பொறியாளர் அருண் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலை ரோட்டோரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டாலும், ஒரிரு நாட்களில் மீண்டும் அதே இடத்தில் செயல்படுகிறது. இது குறித்து கோர்ட் நடவடிக்கை எடுக்கவில்லையா என மீண்டும் கேள்வி எழுப்புகிறது.நடைபாதை என்பது மக்கள் நடந்து செல்வதற்கானது. அந்த பகுதியையும் ஆக்கிரமிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், மாற்று இடத்துக்கு கொண்டு செல்லலாம். திருவள்ளுவர் திடலில் உள்ள வேன் ஸ்டாண்டுகள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
நகராட்சி வாயிலாக, ஆறு தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் உறுப்பினர்களாகவும், அதிகாரிகள் ஒன்பது பேர் என மொத்தம், 15 பேர் அடங்கிய குழு அமைத்து தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் மாற்று இடத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். அட்டை இல்லாதவர்கள், கடைகள் அமைத்தால், ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கருதி அகற்றப்படும்.
ஆக்கிரமிப்பாளர்கள் நாளை (இன்று)க்குள் கடைகளை அகற்றி மாற்று இடத்துக்கு கொண்டு செல்லலாம். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.