/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
/
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
'லேடி' கவுன்சிலர்களின் கணவன்மார் ரகசிய 'டீல்' ஆடிப்போன அதிகாரிகள் செய்வதறியாமல் 'பீல்'
ADDED : மார் 18, 2025 05:08 AM

இ ந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த, 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சியை எட்டிப் பார்த்து விட்டு, சித்ராவும், மித்ராவும் நகர் வலம் புறப்பட்டனர்.
காரில் அமர்ந்ததும் 'சீட் பெல்ட்' அணிந்து கொண்ட மித்ரா, ''இந்த மாச கோட்டா இன்னும் வந்து சேரலைன்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் புலம்பிட்டு இருக்காங்களாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமாப்பா... கார்ப்பரேஷன் டெண்டர் 'டீல்' செய்ற டீம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு 'அமவுன்ட்' பட்டுவாடா செய்றது வழக்கமாம். மாசாமாசம் கொடுத்தா நல்லா இருக்கும்னு கவுன்சிலர்கள் தரப்புல ஏற்கனவே சொல்லியிருக்காங்க. இந்த மாசத்துக்கான கோட்டா, இன்னும் வந்து சேரலையாம்; செலவை சமாளிக்க முடியாம பலரும் தவிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்...''
ஆபீசரிடம் 'டீல்'
''சில பேரு எல்லை மீறி நடந்துக்கறதா சொல்றாங்களே...''
''அதுவா... மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, சில லேடி கவுன்சிலர்களின் கணவன்மார், கார்ப்பரேஷன் ஆபீசருக்கு போன் போட்டு, ஒரு இடத்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. 'அங்கெல்லாம் வர முடியாது; நீங்க, ஆபீசுக்கு வாங்க பேசிக்கலாம்'னு ஆபீசர் சொல்லியிருக்காரு,''
''லேடி கவுன்சிலர்களில் ரெண்டு பேரின் கணவன்மார் மட்டும், ஆபீசரை நேர்ல சந்திச்சு, 'டீல்' பேசியிருக்காங்க. அப்போ, 'நாங்க சொல்ற பில்டிங்குகளுக்கு கார்ப்பரேஷன்ல இருந்து நோட்டீஸ் கொடுக்கணும்; அவங்ககிட்ட இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலிச்சு, எங்களுக்குத் தரணும்னு பேரம் பேசியிருக்காங்க.
அதுக்கு, 'இல்லீகலா பில்டிங் கட்டியிருந்தா நோட்டீஸ் கொடுக்கணும்ங்கிறது ரூல்; அதுக்கான பைன் தொகையை கார்ப்பரேஷன்ல கட்டணும்; நீங்களோ, நானோ வாங்கக் கூடாது. அதெல்லாம் என்னால செஞ்சு தர முடியாதுன்னு, நேருக்கு நேராவே அந்த ஆபீசர் சொல்லிட்டாராம்.
அதை பொருட்படுத்தாம, 'கண்டிப்பா... எங்களுக்காக நீங்க செஞ்சு தரணும்'னு சொல்லியிருக்காங்க. இந்த மேட்டரை கமிஷனர் கவனத்துக்கு கொண்டு போகலாமா, வேண்டாமான்னு, ஆபீசர் யோசிச்சிட்டு இருக்காரு...''
பில் கலெக்டர்கள் 'அட்ரா சிட்டி'
''மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ரெண்டு பில் கலெக்டர்கள், ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க பில்டிங்கா இருந்தா, சொத்து வரியை இஷ்டத்துக்கு எக்குத்தப்பா உயர்த்தி இருக்காங்களாமே...''
''அதுவா... கிழக்கு மண்டலத்துல 'வேலை பார்த்த' ரெண்டு பில் கலெக்டர்கள், சொத்து வரி புத்தகம் போடுறதுக்கு ஆயிரக்கணக்குல லஞ்சம் வாங்குறதா, தலைமை செயலகம் வரைக்கும் பஞ்சாயத்து போச்சு. அந்த ரெண்டு பேரையும், பில் கலெக்டர் போஸ்ட்டிங்ல இருந்து விடுவிக்கணும்னு, வாய்மொழி உத்தரவு வந்துச்சு; இனிமே, அந்த போஸ்ட்டிங்கே கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க...''
''இப்போ, வரி வசூலை தீவிரப்படுத்தணுங்கிறதுக்காக, மேற்கு மண்டலத்துல போஸ்டிங் போட்டுக் கொடுத்திருக்காங்க. அந்த ரெண்டு பேரும் லஞ்சப் பணத்துல குளிக்கிறாங்களாம். அந்தளவுக்கு வசூல் வேட்டையில தீவிரமா இருக்காங்களாம். எம்.எல்.ஏ., எலக்சன்ல போட்டி போட்ட ஆளுங்கட்சி நிர்வாகிக்கு சொந்தமா, வடவள்ளியில இருக்கற பில்டிங்கிற்கு சொத்து வரியை மறுசீரமைப்பு செஞ்சிருக்காங்க,''
''ரூல்ஸ் படி, புதுசா கட்டடம் கட்டியிருந்தா மட்டுமே மறுசீரமைப்பு செய்யணும். பழைய கட்டடத்துக்கு புது வரி போடக் கூடாது. ஆனா, 25 வருஷமான அந்த கட்டடத்துக்கு, புதுசா வரி போட்டு, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை, 45 ஆயிரம் ரூபா செலுத்தணும்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க.
வருஷத்துக்கு, 90 ஆயிரம் ரூபா செலுத்தணும்னு, வந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி பிரமுகர், கார்ப்பரேஷன் ஆபீசரை பார்த்து சொல்லி இருக்காரு. இது மாதிரி, தி.மு.க.,வை சேர்ந்தவங்க பில்டிங்கா பார்த்து, சொத்து வரியை ஒசத்தி விட்டிருக்காங்களாம்,''
இடம் மாறிடுச்சு
''அதை விடுங்க... கார்ப்பரேஷன் டெண்டர் பிரிச்சுக் கொடுக்கற 'டீம்', இடத்தை மாத்திருச்சாமே...''
''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி... அமலாக்கத்துறை 'ரெய்டு' நடந்துச்சே... அதனால, அந்த 'டீம்' ஆடிப்போயிருச்சு. காளப்பட்டி ரோட்டுல பேக்கரி மேல செயல்படுற ஆபீஸ் மேல அமலாக்கத்துறை கண் விழுந்திருக்கு. இருந்தாலும் வழக்கம்போல ஆபீஸ் மட்டும் செயல்படுது; கான்ட்ராக்டர்கள் யாரும் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்,''
''பழைய மாதிரி, டெண்டர்களை பிரிச்சுக் கொடுக்கற வேலையை அவுங்களே செஞ்சிட்டு இருக்காங்க. அதுக்கான கமிஷன் செட்டில்மென்ட்டை எப்போ, எந்த இடத்துல கொடுக்கணும்னு, மொபைல் 'வாட்ஸ்அப்' அழைப்பு மூலம் சொல்லுவாங்களாம்; அந்த இடத்துக்கு போயி கொடுக்கணுமாம். இதுக்கு முன் நடந்த மாதிரி, வெளிப்படையா செயல்படுறதில்லையாம்...''
அபகரிக்க முயற்சி
''இருகூர் டவுன் பஞ்சாயத்துல ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தரு, பட்டியல் இனத்தவங்க யூஸ் பண்ணிட்டு இருக்கற நிலத்தை வளைக்கப் பார்க்குறாராமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.
''ஆமாப்பா... உண்மைதான்! நானும் கேள்விப்பட்டேன். ராவத்துார் ஏரியாவுல வீட்டு மனைகள் பிரிச்சு சேல்ஸ் பண்ணிட்டு வர்றாரு; ஆளுங்கட்சிக் காரங்கங்கிறதுனால, டவுன் பஞ்சாயத்து சைடுல நல்லா 'சப்போர்ட்' பண்றாங்க. லே-அவுட்டுக்கு போற வழியில, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவங்க பயன்படுத்துற கவர்மென்ட் நிலம் இருக்குது. பூங்கா உருவாக்கித் தர்றதாச் சொல்லி, ஆசை வார்த்தை காட்டுறாங்களாம். அந்த இடம் அவுங்க கட்டுப்பாட்டுக்கு போயிடுமோன்னு, ஏரியா மக்கள் பயப்படுறாங்க...'' என்றாள் சித்ரா.
''ஆமா... புது துணை கமிஷனரை பார்த்து, இன்ஸ்.,கள் வெடவெடத்து போயிருக்காங்களாமே..''
''ஆமாப்பா... சிட்டி லிமிட்டுக்குள்ள மூனு ஆபீசர் புதுசா வந்திருக்காங்க. அதுல, வடக்கு துணை கமிஷனரா வந்திருக்கிற தேவநாதன், கொஞ்ச நேரம் கெடைச்சா போதும்; 'ரவுண்ட்ஸ்' கெளம்பிடுறாரு. ஒவ்வொரு ஏரியாவா போறாரு; தனிப்படை அமைச்சு, ஸ்கெட்ச் போட்டு, ரவுடிகளை ஜெயிலுக்கு அனுப்புறாரு,''
''போதைப்பொருட்களை ஒழிக்கிறதுல தீவிரமா இருக்காராம். அவரோட லிமிட்டுக்குள்ள, ஸ்பா, மசாஜ் சென்டர்கள்ல, விபச்சாரம் நடந்துச்சுன்னா... ஸ்டேஷன் இன்ஸ்., மேல ஆக்சன் இருக்கும்னு 'வார்னிங்' பண்ணியிருக்காங்க... மாச மாமூல் 'கட்' ஆயிருமேன்னு இன்ஸ்., தரப்புல புலம்பல் சத்தம் கேட்குது...''
''ஆளுங்கட்சிக்காரங்கன்னு தெரிஞ்சிருந்தும், மணியகாரம்பாளையத்துல நடத்துன ரெய்டுல ஒன்பது பேரை 'அரெஸ்ட்' பண்ணி, ரிமாண்ட்டுக்கு அனுப்பிட்டாங்களாமே...''
''அதுவா... தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வச்சிருக்கறதா தனிப்படைக்கு தகவல் போயிருக்கு. 'ஸ்கெட்ச்' போட்டு, சோதனை செஞ்சதுல, 15 மூட்டை புகையிலை பொருட்கள் சிக்கியிருக்கு. 'அரெஸ்ட்' ஆனவங்க ஆளுங்கட்சியை சேர்ந்தவங்களாம். இருந்தாலும், சரவணம்பட்டி ஸ்டேஷன்ல ஒப்படைச்சு, 'ரிமாண்ட்' பண்ணிட்டாங்க...''
இப்படியும் பணம் பறிப்பு
''அதெல்லாம் இருக்கட்டும்... போலீஸ் கமிஷனரே நேரடியா தலையிட்ட ஒரு வழக்குல பாதிக்கப்பட்டவங்கள்ட்ட இருந்து, ஆயிரக்கணக்குல பணத்தை கறந்துட்டாங்களாமே...''
''அதுவா... ஆனைமலை மந்திரவாதி ஒருத்தரு, சுந்தராபுரம் ஏரியாவுல ஒரு வீட்டுக்குள்ள போயி, பரிகார பூஜை செய்யறதா சொல்லி, தனியா இருந்த லேடீசை பயமுறுத்தி, 21 ஆயிரம் ரொக்கம், தங்க மோதிரத்தை சுருட்டிட்டு, 'எஸ்கேப்' ஆயிட்டாரு. வீடியோ ஆதாரத்தோட கேஸ் கொடுத்தப்போ, ஸ்டேஷன் போலீஸ்காரங்க கண்டுக்கலை,''
''இது தெரிஞ்சு போலீஸ் கமிஷனர், ஸ்டேஷன் போலீஸ்காரங்களை ஒரு பிடி பிடிச்சிட்டாரு. அந்த கேஸ், இப்போ, அவரோட நேரடி பார்வையில நடக்குது. மந்திரவாதியையும், உடந்தையா இருந்தவங்களையும் 'அரெஸ்ட்' பண்ணி, ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க.
பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு, நகையையும், பணத்தையும் மீட்டுக் கொடுக்கணும். வக்கீல், மதிப்பீட்டாளர் மூலமாவே மீட்க முடியும்ங்கிறது ரூல்ஸ். மந்திரவாதி மோசடி செஞ்சு அபகரிச்சதை மீட்டுக் கொடுக்கறதுக்கு, இதுவரைக்கும், 15 ஆயிரம் ரூபாயை வக்கீல் ஒருத்தர் கறந்துட்டாங்களாம். இது, சட்ட ரீதியான வழிப்பறியா இருக்குதேன்னு, பாதிக்கப்பட்டவங்க பரிதவிக்கிறாங்க....
''திருட்டு வழக்குல ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர்., போட வைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு. எப்.ஐ.ஆர்., போட்டாலும் குற்றவாளிகளை, 'அரெஸ்ட்' பண்ண வைக்கிறது அதை விட ரொம்ப சிரமமான காரியமா இருக்கு.
'அரெஸ்ட்' பண்ணுனாலும், பாதிக்கப்பட்டவங்க, இழந்த பொருட்களை மீட்கறது சிக்கலான விஷயமா மாறிட்டு வருது; போலீஸ் தரப்புல ஜனங்களுக்கு நியாயம் கெடைக்கறதுக்கே ஆயிரக்கணக்குல கரன்சியை அழ வேண்டியிருக்குதேன்னு, ஏழை எளியவங்க கண்ணீர் விடுறாங்க...'' என்றாள் மித்ரா.
'லஞ்ச மேன்' வேண்டுதல்
நானும் ஒரு சுந்தராபுரம் மேட்டர் சொல்றேன் கேளு... ''சுந்தராபுரம் இ.பி., ஆபீஸ் 'மேன்' ஒருத்தரு லஞ்சத்துல குளிக்கிறதா கடந்த வாரம் பேசினோமே ஞாபகமிருக்கா... அவர பத்தி என்கொயரி நடக்குதாம். சீக்கிரமே துாக்கிடுவாங்கன்னு பேச்சு... அதனால டென்ஷனான அந்த 'மேன்', கடந்த வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு போயி, தனக்கு எதிரா புகார் கொடுத்தவங்களுக்கு எதிரா கோரிக்கை வச்சு, 'மிளகாய் அரைச்சுட்டு' வந்தாராம்,''.
கிடாவெட்டு விருந்து
''மாஜி வீட்டு கல்யாணத்துக்கு, 'சிட்டிங் மினிஸ்டர்' ஒருத்தரு வந்தாருன்னு, கெளப்பி விட்டுட்டாங்களாமே...''
''ஆமாப்பா... அவரு பங்காளி முறை வருதாம். அதனால, நிச்சயம் வந்துருப்பாருன்னு யூகிச்சு... கெளப்பி விட்டுருக்காங்க. உளவுத்துறையை சேர்ந்தவங்க, 'என்கொயரி' பண்ணி, 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க.
ஞாயித்துக்கிழமை மதுக்கரை ஏரியாவுல, பைபாஸ் பக்கத்துல இருக்கற மண்டபத்துல, தடபுடலா கிடா வெட்டு விருந்து நடந்துருக்கு; நாலாயிரம் பேரு கலந்துக்கிட்டாங்களாம்.
''நம்மூரு எம்.எல்.ஏ.,க்கள் அத்தனை பேரும் ஆஜராகி இருந்தாங்க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வந்திருந்தாராம்... '' என்றபடி, சுந்தராபுரம் ஜங்ஷன் ஓட்டல் அருகே காரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.
இருவரும் அரட்டை முடித்து ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.